2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'இனவாதம் தூசு தட்டப்படுவது இயல்பு நிலையாகும்'

George   / 2017 ஜனவரி 01 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் 'விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்' பற்றிய கருத்துக்கள், தென்னிலங்கை இனவாதிகளால் பெரிதாக பேசப்படுவது  ஒன்றும் புதிய விடயமல்ல.  தமிழ் மக்களோ, தமிழ் தலைவர்களோ  மக்களின் மனவெழுச்சியை, வெளிக்கொணரும் போது இது போன்ற உச்ச இனவாதம் தூசு தட்டப்படுவது தென்னிலங்கையை பொறுத்தவரை இனவாதத்தின் இயல்பு நிலையாகும்” என வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், சனிக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இனவாதத்தின் வரலாற்றுப் பக்கங்கள் காலத்துக்குக் காலம் இவர்களால் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே வரும். இது மாற்றியமைக்கப்பட எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன.

விஜயகலா மகேஸ்வரன், தேசிய அரசிலும், ஐ.தே.கட்சிலும் ஓர் உறுப்பினர். பிரபாகரன் உலகின் சிறந்த தலைவர் என்றும் நாட்டின் பிரதமராக பதவி வகிக்க தகுதியானவர் என்பதையும் தெரிவித்தமையால் விமர்சனங்களுக்குள்ளும், கண்டனங் களுக்குள்ளும் ஆளாகியுள்ளார்.

தனது கருத்தினை ஏற்றுக்கொள்ளவோ, ஜீரணிக்கவோ அவரது கட்சிக்காரர்கள் மறுக்கின்ற பட்சத்தில் தொடர்ந்தும் அக்கூட்டுக்குள் இருந்து கொண்டு உண்மையையும், உரிமைக்குரலையும் ஒலிக்க முடியாது.

ஐ.தே.கட்சி ஒரு இன வாதக்கட்சியாகவே பதிவு செய்யப்பட்டது. ஆட்சி பீடத்தில் ஏறுவதற்காக காலத்துக்கு காலம் சிறுபான்மை இனங்களின் மீது கரிசனை காட்டுவதாக வேசமிட்டாலும் பேரினவாதப் பிடிக்குள் இருந்துஅவர்கள் வெளியேற மாட்டார்கள்,வெளியேறவும் முடியாது.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் தடைகள் பலதாண்டித்தான்,அரசியல் ஒறுத்தல்களுடன் உரிமைக்காக குரல் கொடுக்க முடியும்.

அவர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே சிறப்பான தெரிவாக இருக்க முடியும்.

விடுதலைப் புலிகளின் விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் மக்களின் தார்மீக, உணர்வு பூர்வமான ஆதரவையும் வேறுபடுத்திக்கொண்டு, ஏற்கமறுத்துக்கொண்டு அரசியல் செயற்பாடுகளை இந்த மண்ணிலே ஒரு போதும் முன்னெடுக்கவும் முடியாது, அது வெற்றி பெறவும் முடியாது என்பதையும் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்”  என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .