2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘இளைஞர் புரட்சியை தடுக்கவே உண்ணாவிரதத்தை முடித்தனர்’

Princiya Dixci   / 2017 ஜனவரி 31 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

“தமிழர் தாயகப் பகுதிகளில் பாரிய இளைஞர் புரட்சி ஒன்றினைத் தடுத்து நிறுத்தவே அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு, வவுனியா உண்ணாவிரதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது” என, வடமாகாண சபை உறுப்பினர் 

செந்தில்நாதன் மயூரன் தெரிவிததார். இந்த விவகாரம் தொடர்பில், அவர் நேற்று வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

“இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் சாகும் வரையான உண்ணாவிரதம் இருந்து வந்த உறவினர்களுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு எங்கும் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவிருந்தன.  

இளைஞர்கள் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் அரசாங்கம் நன்கு திட்டமிட்டு எம்மவர்கள் சிலரின் ஆசீர்வாதத்துடன் போராட்டம் தடுத்து நிறுத்தியது. இது பெரிய நாடாகமாகும்.  

தமிழ் நாட்டில் சல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி உலகெங்கும் எம் உறவுகளால், குறிப்பாக இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்திய அரசாங்கம் திணறிப்போய், இறுதியில் அடிபணிந்து சல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியது.  

இந்திய அரசு அடிபணிந்து தடையை நீக்கியது போல் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் போராட்டம் வீரியம் பெற்று இளைஞர் புரட்சிக்கு முகம் கொடுக்க நேர்ந்தால், உண்ணாவிரதிகள் மரணிக்க நேர்ந்தால் சர்வதேசத்துக்கு முன்னால் தலை குனிந்து நின்று பொறுப்புக் கூற வேண்டிய நிலை ஏற்படும் என அஞ்சியே அரசாங்கம் இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றது. 

‘மகனோடு தான் வருவோம் இல்லையேல் பிணமாகத்தான் வருவோம்’ என உறுதியாகவும், தம்மை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லக்கூடாது என வைராக்கியத்தோடும், இப்போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், இறுதியில் உறுதியற்றுப் போக எம்மவர்கள் சிலர் தமது அரசியல் வித்துவத்தைக் காட்டி, தாம் வெற்றிப் பெற்றதாக எண்ணினால், அது துரோகத்தனமானது மட்டுமல்ல அரசியல் அறிவிலித்தனமுமாகும். 

எதுவானாலும், எமது உறவுகளின் பெற்றோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியானாலும் அவர்கள் நித்தமும் செத்துக்கொண்டிருக்கும் நிலைமைக்கு அரசாங்கம் உறுதியளித்ததன் பிரகாரம் எதிர்வரும் 9ஆம் திகதி உரிய பதில்களை வழங்க வேண்டும்.  

காணாமற்போனவர்கள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் கூறியதையே அலரி மாளிகையிலும் கூறப்படும் என்றால், சந்திப்பொன்றுக்கான தேவை அவசியமாக இருக்காது,பொறுப்பான பதிலை நல்லாட்சியின் தலைவர்கள் வழங்க வேண்டும். 

மீண்டும் காலம் தாழ்த்துவதையோ, தட்டிக்கழிப்பதையோ, ஏமாற்று நாடகத்தை மீண்டும் அரங்கேற்ற முயற்சிப்பதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. 

உரிய பதிலை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்து நிற்கும் காணாமல் போனோரின் உறவுகளுக்கு ஆதரவாகவும், பக்க பலமாகவும் செயற்பட்டு தீர்வினைப் பெற்றுத்தர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அர்த்தமுள்ள, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சகலரினதும் எதிர்பார்ப்பாகும். 

‘நீதி கோரி நியாயம் தேடி வரும் உறவுகளின் உணர்வோடு தேசிய நல்லிணக்க அரசு விளையாட முனையக்கூடாது” என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .