Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கேப்பாபிலவு மக்களின் காணிகளில், 235 ஏக்கர் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை பொய், கேப்பாபிலவு மக்களுக்குரிய காணிகளில், ஒரு ஏக்கர் நிலம் கூட விடுவிக்கப்படவில்லை” என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2016இல் முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான குடும்பங்கள், தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேறிய போதும், கேப்பாபிலவு மக்களுக்கு சொந்த இடத்திலான மீள்குடியேற்றம் என்பது எட்டாக்கனியாகியுள்ளது.
இவர்களுடைய நிலங்கள், விளைநிலங்களை முல்லைத்தீவு மாவட்ட, இராணுவத் தலைமையகம் ஆக்கிரமித்துக் கொண்டதுடன், சொந்தக் கிராமத்தின் அருகே உள்ள சீனியா மோட்டைக் கிராமத்தில் வழங்கப்பட்ட 20 பேர்ச் காணிகளில், வீடுகள் என்ற பெயரில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட 350,000 ரூபாய் பெறுமதியான கூடுகளில் வற்புறுத்திக் குடியமர்த்தப்பட்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் சாசனங்கள் விதிகளுக்கமைய, கேப்பாபிலவு மக்கள், உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களாகவே இன்றும் கருதப்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.
இருந்த போதும், முல்லைத்தீவு மாவட்ட செயலகப் புள்ளிவிவரத்தில், இவர்களை மீள்குடியமர்ந்தவர்களாக குறிக்கப்பட்டுள்ளமை வேதனையான விடயம். கேப்பாபிலவு மக்கள், தமது காணிகளை விடுவிக்கக் கோரி அடிக்கடி போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இதனால், வடக்கு மாகாண முதலமைச்சர், இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவினரை இப்பிரச்சினையை ஆய்வு செய்வதற்காக நியமித்தார்.
இக்குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், இராணுவத்தினர் தமது இராணுவத் தலைமையகத்தை தற்போது அமைந்துள்ள இடத்துக்கு, தென்மேற்காக நகர்த்த வேண்டும் என்றும் கேப்பாபிலவு மக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டுமெனவும் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் நகல், முதலமைச்சரால், ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மற்றும் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கக்கூடிய நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனால் இராணுவத்தினர், தமது முல்லைத்தீவு மாவட்ட தலைமையகத்துக்கு கேப்பாபிலவு மக்களை அழைத்து, அவர்களது குடியிருப்பு காணிகளை தாம் விடுவிக்கவுள்ளதாக உறுதியளித்து, அவர்களது போராட்டத்தை தளர்வடையச் செய்தனர்.
ஆனால், கேப்பாபிலவு மக்களின் குடியிருப்புக் காணிகளில் ஒரு அங்குலத்தை கூட விடுவிக்கவில்லை.
சீனியாமோட்டைப் பகுதியில் உள்ள, வற்றாப்பளை மக்கள் 42 பேருக்கு சொந்தமான 78 ஏக்கர் மேட்டு நிலப்பயிர்ச்செய்கைக்குரிய காணி, சூரிபுரம் பகுதியில் தற்போது இலங்கையில் இல்லாத ஒருவருக்கு சொந்தமான 70 ஏக்கர் காணி, மற்றுமொருவருக்குச் சொந்தமான 6 ஏக்கர் காணி என, மொத்தமாக 154 ஏக்கர் காணியே விடுவிக்கப்படுவதாகக் கூறப்பட்டு, இம்மாதம் 25ஆம் திகதி, வித்தியானந்தா கல்லூரியில் வைத்து உறுதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அன்றைய தினம், 235 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதாக இராணுவத்தால் பொய் சொல்லப்பட்டுள்ளதுடன், இராணுவத்தின் கூற்றுக்களின் நம்பகத்தன்மை அற்ற நிலையை காட்டி நிற்கின்றது.
வெளிப்படையாக நன்றாகத் திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட கேப்பாபிலவு மக்கள், 25ஆம் திகதி? அமைதிவழிப் போராட்டம் ஒன்றை தமது கிராமத்தில் நடாத்தினார்கள். இனிவரும் நாட்களில் அம்மக்களை எவரும் ஏமாற்ற முடியாது.
தமது தாய் மண்ணில் குடியேறும் வரை அம்மக்கள் தொடர்ந்தும் போராடுவார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இம்மக்களுக்காக நாங்கள் துணை நிற்போம்” என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Jul 2025