2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'படையினருக்கு நன்னீர் எடுத்துச் செல்வதை நிறுத்துங்கள்'

George   / 2017 மார்ச் 26 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன், ஐ.நேசமணி

“சுழிபுரம், சம்பில்துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு, பொன்னாலையில் இருந்து தினமும் 40 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 50 ஆயிரம் லீற்றர் வரையான தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவிடம் பொன்னாலை கிராம அபிவிருத்திச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால், பொன்னாலை கடற்கரையில் அமைக்கப்படவுள்ள உவர்நீர்த் தடுப்பணைக்கான பணிகளை, ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (25) இடம்பெற்றது.
அதன்போது பொன்னாலை கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், இது தொடர்பில் மகஜரொன்றை கையளித்து ​கோரிக்கை விடுத்தனர்.

கடற்படையினர் தினமும் நன்னீரை எடுத்துச் சென்றுகொண்டிருப்பதால் அந்தக் கிணறுகளில் உள்ள நன்னீரின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அடுத்துவரும் சில வருடங்களில் நன்னீர், உவர்நீராக மாறும் தன்மை காணப்படுவதாக, அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், “பொன்னாலையில் உள்ள மக்களுக்கு தினமும் காலை ஒரு மணித்தியாலம் மட்டும் நன்னீர் விநியோகிக்கப்பட்டுகொண்டிருக்கும் நிலையில், கடற்படையினர் பெருமளவு நீரை எடுத்துச் செல்வது எந்த வகையில் நியாயம்?” என்றும் பொன்னாலை கிராம அபிவிருத்திச் சங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

அத்துடன் வீட்டுத் திட்டங்கள், குடிதண்ணீர்ப் பிரச்சினை மருத்துவ வசதிகள், போக்குவரத்து என்பவற்றில் காணப்படும் தேவைகள் குறித்தும் அந்த மகஜரில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி விடயங்களை,  வலி.மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பல தடவைகள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மகஜரின் பிரதிகள், நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

மகஜரைப் பெற்றுக்கொண்ட சந்திரிகா குமாரதுங்க இந்த விடயங்கள் தொடர்பாக விரைவில் சாதகமான பதில் வழங்குவதாகக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .