2025 ஜூலை 23, புதன்கிழமை

ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு தற்காலிக பாடசாலை ஏற்பாடு

Kogilavani   / 2014 ஜனவரி 09 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி ஜெயபுரம் வித்தியாலயத்தில் உயர்தரப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு புதன்கிழமை (08) மகஜர் கொடுத்தவேளை, குறித்த வித்தியாலய மாணவர்களை தற்காலிகமாக முழங்காவில் மகா வித்தியாலயத்திற்குச் சென்று கல்விகற்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேல் தெரிவித்தார்.

கிளிநொச்சி, ஜெயபுரம் வித்தியாலயத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் 36 மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரத்தில் கலை, வர்த்தக பிரிவுகளில் கல்விகற்று வருகின்றனர்.

இருந்தும், மேற்படி பாடசாலையில் உயர்தரத்தில் கணக்கியல், வர்த்தகம், இந்துநாகரிகம், பொருளியல், புவியியல், கிறிஸ்தவம் ஆகிய பாடங்களைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றது. 

இந்நிலையில், குறித்த பாடசாலையின் மாணவர்கள், பெற்றோர்கள், அப்பிரதேச பங்குத்தந்தை, பழைய மாணவர்கள் ஆகியோர் இணைந்து கிளிநொச்சி கல்விப் பணிமனைக்கு புதன்கிழமை (08) சென்று தமது பாடசாலையில் இருக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தருமாறு மகஜரைக் கையளித்ததுடன், தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனுக்கும் மகஜரை கையளித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளர், 

கிளிநொச்சி ஜெயபுரம் வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் தற்காலிகமாக முழங்காவில் மகா வித்தியாலயத்திற்குச் சென்று கல்விகற்குமாறும் அதற்கான ஏற்பாடுகளைத் தான் செய்து தருவதாகவும் தெரிவித்ததுடன், ஜெயபுரம் வித்தியாலயத்திற்கு உயர்தரப் பாடங்களுக்கான ஆசிரியர்களை நியமித்துத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், 

மேற்படி பாடசாலைக்கு ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .