2025 ஜூலை 23, புதன்கிழமை

கழிவு முகாமைத்துவத்தில் மாற்றம் வேண்டும்: வடமாகாண சுகாதார அமைச்சர்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 13 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடமாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களினால் தற்போது மேற்கொள்ளப்படும் கழிவு முகாமைத்துவ முறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படல் வேண்டுமென வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா நகர சபையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த சில நாட்களாக வவுனியா நகரசபை மற்றும் பிரதேச சபையின் ஊழியர்களால் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

முதலமைச்சரின்; கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வழங்குவதற்காக வடமாகாண சபையில் தீர்மானமொன்று சுகாதார அமைச்சரினால் கொண்டுவரப்படிருந்தது.

இந்த நிலையில் சுகாதார அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க ஊழியர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டிருந்த நிலையில் அவர்களை நேற்று வடமாகாண சுகாதார அமைச்சர் சந்தித்து கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

'உள்ளூராட்சி சபைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் மாவட்டத்தின் சுகாதார துறையின் முன்னேற்றத்திற்கு மறைமுகமாக பெரும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டில் வவுனியாவை ஆட்டிப்படைத்த டெங்கு உயிர்க்கொல்லி நோய் பரவுவதை தடுப்பதற்கு சுகாதார ஊழியர்கள் பெரும்பங்காற்றியுள்ளனர்.

எனவே, உங்களின் பணியானது சமூகப்பொறுப்பு வாய்ந்தது. உங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதற்கு இந்த மாகாணசபை ஒருபோதும் பின்நிற்காது.

அதேபோல் தற்போதைய கழிவு முகாமைத்துவ முறைகள் மேலும் நவீன மயப்படுத்தப்படல் வேண்டும். குறிப்பாக கடைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்படும்போது உக்கக்கூடியவை, உக்காதவை தனித்தனியாக சேகரிக்கப்படல் வேண்டும்.

அத்துடன் உக்கக்கூடியவை கூட்டெருவாக மாற்றப்பட்டு பயிர்ச்செய்கைக்கு சேதன உரமாக பயன்படுத்தப்படுவதுடன், ஏனைய பிளாஸ்டிக்கு போன்றவை மீள்சுழற்சிக்கு பயன்படுத்தப்படல் வேண்டும்.

முதற்கட்டமாக வவுனியா நகரசபையின் கழிவுமுகாமைத்துவம் நவீனமயப்படுத்தப்பட்டு ஏனைய மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும் எனவும் கேட்டக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .