2025 ஜூலை 23, புதன்கிழமை

வேரவில் கிராமத்திற்கு மின் விநியோகிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்: முருகேசு சந்திரகுமார்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 19 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்


வேரவில் கிராமத்திற்கு மின்சாரம் வழங்குவதில் நாம் அதிக மகிழ்ச்சியடைகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக்குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

இங்கு மின்சாரத்தை கொண்டுவருவதற்கு நாம் 02  வருடங்களாக திட்டமிட்டு செயற்பட்டோம் எனவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட  வேரவில் கிராமத்திற்கு முதல் முறையாக நேற்று சனிக்கிழமை  08 மில்லியன் ரூபா செலவில் மின்சாரம்  வழங்கப்பட்டது. மின்; விநியோகத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'ஒரு இனத்தின் தேசிய இருப்பு என்பது அந்த இனம் தனது சொந்த மண்ணில் எல்லாம் பெற்று நிறைவான, உறுதியான இருப்பை நிலை நிறுத்தும்போதுதான் சாத்தியமாகிறது. இது அபிவிருத்தி அரசியலை அரவணைத்துச் செல்லும் சமூகத்தினால் தக்கவைத்துக்கொள்ள முடியும். சொந்த ஊரில் எமது தனித்துவங்களை, கலை, கலாசாரங்களை பேணி பாதுகாத்திருக்கும் போதுதான் நாங்கள் ஒரு உண்மையான தேசிய இனமாக இருக்கலாம். அத்துடன், இன அடையாளத்தையும்; பாதுகாக்கலாம்.

கடந்த இரண்டு வருடங்களாகவிருந்து கிளிநொச்சியின் பல பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்கி வருகின்றோம்.  முறிகண்டியிலிருந்து உயரழுத்த மின்சாரம் வேரவில் வரைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக கிட்டத்தட்ட 155 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் சகல இடங்களுக்கும் உயரழுத்த மின்சாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இனி மின்மாற்றிகள் பொருத்தப்பட்டு மக்களுக்கு மின்சாரம் விநியோகிக்கும் நடவடிக்கைகள் உண்டு. கிளிநொச்சி மாவட்டத்தில் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதில் 60 சதவீதத்தை நெருங்கிவிட்டோம். இந்த வருட இறுதிக்குள் கிளிநொச்சி மாவட்டத்தில் 100 சதவீத மின்சாரம் வழங்க வேண்டும் என்பதுதான் எமது இலக்கு.

பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில்தான் நாம் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அதிக நிதிகளைப் பெற்று பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வலைப்பாடு, கிராஞ்சி உள்ளிட்ட  பிரதேசங்களுக்கும் மின்சாரம்  விநியோகிக்க  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்களுக்கான மின்சார இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும்.

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியில் வீதியும் மின்சாரமும் முக்கியமானது. அதனடிப்படையில் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். எங்களுடைய செயற்பாடுகளில் எப்பொழுதும் கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றோம். இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற நிலையில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வில் இன்று பெருமளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த முன்னேற்றங்கள் மேலும் அதிகரித்து மக்கள் ஒரு நிறைவான வாழ்க்கையை பெறுவதற்கு நாம் அனைவரும் அபிவிருத்தி அரசியலை அரவணைத்து செல்லும் மக்களாக இருக்க வேண்டும்.

தற்போது மக்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேற்றத்தை நோக்கிச் செல்லவேண்டும். அதற்காக அனைவரும் சமூக முன்னேற்றத்திற்காக உழைப்பாளிகளாக மாற வேண்டும். இது ஒரு மிகப் பெரிய சமூக கூட்டுப் பொறுப்பு. அரசியலுக்கு அப்பால் இதில் எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .