2025 ஜூலை 23, புதன்கிழமை

மன்னார் மனித புதைகுழியின் எல்லையை கண்டுபிடிக்க முடியவில்லை: வைத்தியரத்ன

Menaka Mookandi   / 2014 ஜனவரி 21 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


'மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியின் எல்லை எதுவரை உள்ளது என்பதனை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளோம்' மேற்படி புதைகுழியைத் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவில் அங்கம் வகிக்கும் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரத்ன தெரிவித்தார்.

அத்துடன், இந்த மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக் கூடுகளுக்குரியவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது தொடர்பில் கண்டறிவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி, மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் பத்தாவது தடவையாக இன்று (21) செவ்வாய்க்கிழமை தோண்டப்பட்டது.

குறித்த பணிகள் நிறைவுற்ற நிலையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த சட்ட வைத்திய நிபுணர்,

'குறித்த மனித புதைகுழியில் இருந்து தொடர்ச்சியாக மனித எலும்புக் கூடுகள் மாத்திரமே மீட்கப்பட்டு வருகின்றன. பாரிய அளவிலான தடையப்பொருட்கள் எவையும் இதுவரை மீட்கப்படவில்லை' என்றார்.

'இன்று காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை தோண்டப்பட போதும் முழுமையாக எவ்வித மனித எலும்புக் கூடுகளும் மீட்கப்படவில்லை. புதிதாக தோண்டப்பட்ட பகுதிகளில் மனித எலும்புக்கூட்டின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன' என்று சட்ட வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டார்.

இதுவரை 40 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், துண்டுகளாகவும் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நாளை புதன்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் மனித புதை குழி தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .