2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னார் மனித புதைகுழி தோண்டும் பணி நிறைவு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 05 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டும் நடவடிக்கைகள்  புதன்கிழமையுடன் (05) முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி குறித்த பகுதியில் நீரிணைப்பு வேலைத்திட்டத்திற்காக பள்ளம் தோண்டியபோது, அங்கு மனித  எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் உள்ளமை தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் கடந்த 3ஆம் திகதிவரை 32 தடவைகள்  குறித்த மனித புதைகுழியை  தோண்டும் பணியை  மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையிலான குழுவினர்  மேற்கொண்டுவந்தனர். 

இதன்போது, சுமார் 80 மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள்  மீட்கப்பட்ட நிலையில், மன்னார் நீதவானின் உத்தரவுக்கமைய இவை 80 பெட்டிகளில் தனித்தனியாக பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இன்றையதினம் (05) 33ஆவது தடவையாக மேற்படி  மனித புதைகுழியை  தோண்டும் முகமாக திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியுள்ள  இடத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது அநுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண, கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகர் விக்கிரம சேகர ஆகியோருக்கு இடையில் நீண்டநேரம் கருத்துப் பகிர்வு நடைபெற்றது. இந்நிலையில், மேற்படி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளை இன்றையதினத்துடன் (05) முடிவுக்கு கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பெட்டிகளில் பொதிசெய்யப்பட்டு  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 80 மனித  எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்களை ஆய்வுக்காக எங்கு கொண்டுசெல்வது என்பது  தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு  மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம்  உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .