2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முத்தையன்கட்டுக் குளத்துக்கு ஆபத்து: ஐங்கரநேசன்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 07 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

முத்தையன்கட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்லுடைக்கும் சுரங்கத் தளத்தால்,  முத்தையன்கட்டுக் குளத்துக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதென  வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் வியாழக்கிழமை (06) விடுத்துள்ள  ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'
முத்தையன்கட்டில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற  வயல் விழாவுக்கு நான் சென்றபோது, அப்பகுதியில் புதிதாகச் செயற்பட ஆரம்பித்திருக்கும் கல்லுடைக்கும் சுரங்கத்தளம் பற்றிச் சிலர் எனது கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.  இந்நிலையில், அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்ட நான் இது தொடர்பாக எனக்கு அறிக்கையிடுமாறு முல்லைத்தீவு மாவட்டப் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.ஸ்ரீஸ்கந்தராஜாவிடம் கேட்டேன். அவர் எனக்குச் சமர்ப்பித்திருக்கும் அறிக்கையில், தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனமொன்றால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்லுடைக்கும் சுரங்கத்தளம் முத்தையன்கட்டுக் குளத்தின் குளக்கட்டு மட்டத்திலிருந்து 03 மீற்றர் தூரத்திலும் குளத்தின் உயர்மட்ட வெள்ளம் பிடிக்கும் தூரத்திலிருந்து  120  மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அளவீடுகளின்படி இச்சுரங்கத்தளத்தைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது முத்தையன்கட்டுக் குளத்துக்கு எதிர்காலத்தில் மிகப் பெரும் ஆபத்தாக அமையும்.

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தால் இப்பகுதியில் 25 அடி ஆழம்வரை பாறைகளை உடைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அகழப்படின் குளத்தின் நீர் இப்பகுதிக்குள் புகுந்துவிடும் ஆபத்து ஏற்படும். குளத்துக்கான நீர்வரத்துப் பாதையினையும் இந்நடவடிக்கை தடைசெய்வதாக அமைந்துவிடும். அத்தோடு, கல்லுடைக்கும்போது பயன்படுத்தப்படும் வெடி மருந்தின் உரத்த அதிர்வினால் சுற்றயலில் உள்ள பாறைகளில் வெடிப்பு ஏற்படும்.

முத்தையன்கட்டுக் குளத்தின் குளக்கட்டு மற்றும் கலிங்கு பாறைகளின் மேலேயே அமைக்கப்பட்டிருப்பதால், அதிர்வுகளால் இவற்றின் அத்திவாரமே பாதிப்புக்கு ஆளாகும். இவற்றின் பிரதிபலிப்பு முத்தையன்கட்டுக் குளம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதறடித்துவிடும் என்பதால் சுரங்க அகழ்வு வேலைகள் தொடர்வதை அனுமதிக்க முடியாது.

இதற்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக நிறுத்துமாறு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகத்துக்கும் முல்லைத்தீவு மவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின்  வடமாகாண பிரதிப்பணிப்பாளர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம்.
முத்தையன்கட்டுக் குளத்துக்கு அருகாமையில் சுரங்கத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசின் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம் இப்பிரதேசம் தொடர்பாக விரிவாகத் தெரிந்து வைத்திருக்கும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் எவ்வித கலந்தாலோசனையுமின்றித் தான்தோன்றித்தனமாக அனுமதி வழங்கியுள்ளது.

இது கண்டனத்துக்குரியது. வடக்கில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபை உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசு வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எதுவாக இருப்பினும் மாகாண நிர்வாகத்தின் அனுசரணையுடன் செயற்படுத்துவதே பொருத்தமாக அமையும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .