2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கைதுசெய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை விடுவிக்க கோரிக்கை

Suganthini Ratnam   / 2014 மார்ச் 17 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான றுக்கி பெர்ணான்டோ, அருட்தந்தை பிரவீண் ஆகியோர் கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை (16) இரவு பயங்கரவாத குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று ஜனாதிபதியை கோருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் திங்கட்கிழமை (17)  விடுத்துள்ள அறிக்கையில் மேலும்  தெரிவித்துள்ளதாவது,

'ஞாயிற்றுக்கிழமை (16) கொழும்பு மனித உரிமைச் செயற்பாட்டாளரான  றுக்கி பெர்ணான்டோ  என்பவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான அருட்தந்தை பிரவீண் என்பரும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அறிகின்றோம்.

இதற்கு முன்பாக கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சி தர்மபுரத்தில் காணாமல் போன தனது மகனை தேடியலையும் திருமதி பாலேந்திர ஜெயகுமாரி என்பவரும் அவரது மகள் விபூஷிகா என்பவரும் இதே பயங்கரவாத குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, திருமதி ஜெயகுமாரியை பூசா முகாமிற்கும் அவரது மகளை கிளிநொச்சியிலுள்ள சிறுவர் காப்பகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருவரினதும் கைதுகள் குறித்த உண்மை நிலைகளை ஆராயவே மேற்படி இரு மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கிளிநொச்சி சென்றதாக பேசப்படுகின்றது. இவ்வாறான சூழலில்தான், இந்த இருவரும் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்டவர்கள் யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதுமட்டுமன்றி, இனந்தெரியாத குழுக்கள் என்ற பெயரில் பலர் கடத்தப்பட்டு காணாமலும் போகின்றனர்.
கார்த்திகேசு நிரூபன் என்ற 30 வயது விஞ்ஞான ஆசிரியர் வவுனியாவில் வைத்துக் காணாமல் போயிருந்தார். ஆனால், கடந்த வாரம் மாங்குளத்தில் இவரது எலும்புக்கூடும் அதனருகில் அவரது அடையாள அட்டையும் சைக்கிள்ச் சாவியும் கண்டெடுக்கப்பட்டன.

ஆகவே, இந்தக் கடத்தல்கள் என்பதும் காணாமல் போகச் செய்தல், சட்டத்திற்கு புறம்பான கைதுகள் என்பதும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. இதன் தொடர் நடிவடிக்கையாக இப்பொழுது மனித  உரிமை செயற்பாட்டாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இங்கு ஒரு விடயம் தெளிவாகப் புலப்படுகின்றது. காணாமல் போனோர்களுக்காக அவர்களது உறவுகள் போராடக்கூடாது. போராடினால் கடத்தப்படலாம் அல்லது கைதுசெய்யப்படலாம். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக மனித உரிமை செயற்பாட்டாளர்களும் செயற்படக்கூடாது. அவர்களும் கைதுசெய்யப்படலாம் அல்லது காணாமல் போகச் செய்யப்படலாம் என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

றுக்கி பெர்ணான்டோவும்; அருட்தந்தை பிரவீணும் பல காலமாக மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்கள். இவர்களைக் கைதுசெய்வதற்கோ அல்லது தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கோ எதுவித முகாந்தரங்களும் இல்லை.

ஆகவே இவர்களை இந்த அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும். காட்டாட்சி செய்யக்கூடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற சட்டங்களை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு இனம், மொழி, மதம் கடந்து மனித உரிமைகள், அடிப்படைச் சட்டங்கள், ஜனநாயக விழுமியங்கள் என்பவற்றில் நம்பிக்கை கொண்டோர் இவற்றிற்காகப் போராட முன்வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது.

மேலும், கைதுசெய்யப்பட்;டோ அல்லது தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் ஜனாதிபதியைக் கோருகின்றோம்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .