2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இரும்புப் பிடிக்குள் தமிழர்களை கொண்டுவர முயற்சி: சி.ஆனந்தன்

Menaka Mookandi   / 2014 மார்ச் 20 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இரும்புப் பிடிக்குள் தமிழ் மக்களைக் கொண்டு வரும் முயற்சியின் வெளிப்பாடே இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கையாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல்கள் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வவுனியாவின் பிரதான கிராமங்களான பூந்தோட்டம், அண்ணாநகர், மகாறம்பைக்குளம், கருப்பனிச்சங்குளம் மற்றும் காத்தார் சின்னக்குளம் கிராமங்களில் புதன்ழமை (19) நள்ளிரவில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட இராணுவத்தினர் வியாழன் நண்பகல் வரை தேடுதலை தொடர்ந்தனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது, வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்பட அல்பங்களும் சோதனையிடப்பட்டு அதில் உள்ளவர்கள் தொடர்பாகவும் இராணுவத்தினர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

வியாழக்கிழமை (20) காலை தமது கடமைகளுக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோரிடம் அடையாள அட்டைகள் சோதனையிடப்பட்டுள்ளதுடன், பல கேள்விகள் கேட்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் வெளியேற இராணுவம் அனுமதித்துள்ளது.

யுத்தம் இடம்பெறும் இடத்தினைப் போன்று அவர்கள் அங்குமிங்கும்  பரபரப்புடன் ஓடித்திரிந்ததாகவும் பொதுமக்கள் முறையிட்டனர்.

மேலும், வவுனியாவின் ஏனைய பகுதிகளிலும் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சுதந்திரபுரம் மற்றும் இருட்டுமடு கிராமங்களும் சுற்றிவளைக்கப்பட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிராமத்தவர்களை ஒரு பொது மைதானத்திற்கு விசாரணைக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும் தெரியவருகிறது.

ஏற்கனவே, தமிழர் தாயகப் பிரதேசம் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பெரும் எடுப்பிலான இத்தகைய சுற்றிவளைப்புக்கள், தேடுதல் நடவடிக்கைகளால் மீண்டும் இப்பிரதேசத்தில் பதற்ற நிலையைத் தோற்றுவிக்கவே அரசு முயற்சிக்கின்றது.

மனித உரிமை விவகாரம் ஜெனீவாவில் சூடுபிடித்துள்ள நிலையில், அதனைத் திசை திருப்பவும் தனது ஆக்கிரமிப்புக் கொள்கையிலிருந்து சிறிதளவும் விலகாத தன்மையைக் கொண்டுள்ள இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் மீண்டும் தமது இரும்புப் பிடிக்குள் தமிழ் மக்களைக் கொண்டு வரும் முயற்சியின் வெளிப்பாடே இதுவாகும்.

சமீபத்தில் கிளிநொச்சி, தருமபுரம் பகுதியிலும் முல்லைத்தீவிலும் இடம்பெற்ற அடாவடித்தனமான, சுற்றிவளைப்பு, தேடுதல், கைதுகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களான வண. பிதா, அவருடன் சென்றவர், ஒன்றுமறியாத தாய் அவருடைய பராயமடைந்த மகள் கைது விவகாரம் குறித்து சர்வதேச சமூகம் கவனத்திலெடுத்து இங்குள்ள தமிழ் மக்களை காப்பாற்ற முன்வர வேண்டும்' என சிவசக்தி ஆனந்தன் எம்.பி, தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .