2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வட்டுவாகல் நந்திக்கடல் எல்லைக்குட்பட்ட பகுதியை ஆழமாக்குதல் தொடர்பில் ஆய்வு

A.P.Mathan   / 2014 மார்ச் 22 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வட்டுவாகல் நந்திக்கடல் எல்லைக்குட்பட்ட பகுதியை ஆழமாக்குதல் தொடர்பில் நேற்று ஆய்வு செய்யப்பட்டதாக வட மாகாணசபை உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரிடம் கேட்டபோது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மாகாணசபையின் 7ஆவது கூட்டத்தொடர் அமர்வில் நந்திக்கடலின் எல்லைக்குட்பட்ட பகுதியை ஆழமாக்குதல் தொடர்பில் பிரேரணை ஒன்று என்னால் முன்வைக்கப்பட்டது.

அப் பிரேரணையில், மிகப்பெரிய அளவில் இறால், மீன்கள் பிடிபடும் நந்திக்கடலின் பகுதிகளில் சேறு அதிகமாக உள்ளதால் நீர்த்தேக்கம் குறைவாக உள்ளது. கோடை காலங்களில் நீர் வற்றுவதால் இதனை நம்பியுள்ள மக்கள் தொழில் செய்ய முடியாமல் வறுமைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதனால் சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திற்கு முட்டி நிக்கும் சேற்றினை குறைந்தது 2 அடி ஆழத்திற்காவது சேற்றினை அள்ளுவதன் மூலம் சிறுகடலின் ஆழத்தினை அதிகரித்து தண்ணீரை தேக்கி இறால் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

இதன் மூலம் புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞன் மடம், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல், செல்வபுரம், கோயில் குடியிருப்பு, மணற்குடியிருப்பு, வண்ணாங்குளம், கள்ளப்பாடு, சிலாவத்தை, தீயோகுநகர், உணாப்பிலவு, முல்லை நகர், கரைச்சிக்குடியிருப்பு, வற்றாப்பளை, ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள சிறுகடல் மீனவர்கள், இரணைப்பாலை என பெருந்தொகையான கிராமங்களிலுள்ள மீன்பிடியை நம்பி வாழும் குடும்பங்களும் வீச்சுத்தொழிலை பகுதிநேரத் தொழிலாக செய்துவருபவர்களும் சேற்றினால் எதிர்கொண்ட இடர்பாடுகள் களையப்படுவது மட்டுமல்லாது அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் நந்திக்கடலை ஆழமாக்குதல் அவசியமாகிறது எனவும் குறிப்பிட்டிருநதேன்.

அதன் நிமிர்த்தம் மாகாண சபையின் 7ஆவது கூட்டத்தொடரில் ஏகமனதாக மேற்படி பிரேரணை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நேற்று நந்திக்கடலை பார்வையிடவென வருகைதந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதரலிங்கம், வடமாகாண சபை மீன்பிடித்துறை அமைச்சர் பா. டெனீஸ்வரன், சுகாதாரத்துறை அமைச்சர் ப. சத்தியலிங்கம் மற்றும் உறுப்பினர்கள் ஜி.ரி லிங்கநாதன், எம். அஸ்மின் ஆகியோரை வட்டுவாகல் பிரதேச மக்கள் சகிதம் அழைத்துச்சென்று மேற்படி இடத்தினை காண்பித்ததோடு, அதிகப்படியான சேற்றினால் அவதிப்படும் மீனவர்களின் நிலையையும் விளக்கியிருந்தேன்.

இதனையடுத்து வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பா. டெனீஸ்வரன், நந்திக்கடலின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சேற்றினை அள்ளுவது தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று நம்பிக்கை அளித்தார் என து. ரவிகரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .