2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இன அழிப்பே இடம்பெறுகின்றது: கஜேந்திரகுமார்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 27 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இலங்கை அரசினால் தொடர்ச்சியாக  இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கை தொடர்பான விவாதத்தின்போது, கண்ஐந்திரகுமார் பொன்னம்பலம்; ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்ததாக அக்கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் அவர் உரையாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'நாங்கள் இந்த அவைக்கு பல எழுத்து மூல அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறோம்.  இறுதியாக எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் 2013ஆம் ஆண்டு நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தினால், கடந்த கால போரின் போதும் தற்போதும் இலங்கைத் தீவில் இன அழிப்பு நடைபெற்று வருகிறது என்று தீர்ப்பளிக்கப்பட்டமையை சுட்டிக்காட்டியிருந்தோம்.

நாங்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை கவனமாக படித்தோம். அதன் பிரகாரம் மூன்று பிரதான பிரிவுகளில் எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கின்றோம்.

இலங்கைத் தீவில் அண்மைக் காலமாக நடந்துவரும் நிகழ்வுகளை பொறுத்தவரை தமிழர் தேசத்தின் இருப்பை இல்லாது அழிக்கும் நோக்கத்துடன், இலங்கை அரசினால் தொடர்ச்சியாக  இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்மானத்துடன் நாங்கள் இணங்குகிறோம்.

இலங்கைத் தீவில் மீள்நல்லிணக்கம் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. எத்தகைய மீள்நல்லிணக்கமும் தற்போதைய இலங்கை  அரச கட்டமைப்புக்குள் எண்ணிக்கையில் குறைந்த சனத்தொகையையுடைய தமிழர் தேசமும், எண்ணிக்கையில் அதிக சனத்தொகையை கொண்ட சிங்கள தேசமும் உள்வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும். சிங்கள தேசத்திற்கு தமிழர் தேசத்துடன் எத்தகைய மீள்நல்லிணக்கத்தையும் மேற்கொள்ளும் நோக்கமேயில்லை என்பதுடன், தமிழர் தேசத்தை சிங்கள பௌத்த இலங்கை என்பதற்குள் ஒன்று கலப்பதையே விரும்புகிறது.

உண்மையில் மாற்றுவழி எதுவும் இல்லாததால், தமிழ் மக்களுக்கு தற்போது இருக்கக்கூடிய பரிகாரம் என்பது நாட்டைவிட்டு வெளியேறுவது அல்லது சிங்கள தேசத்துக்குள் ஒன்று கலந்து விடுவதாகும்.

பொறுப்புக் கூறுவதை பொறுத்த மட்டில், நடைபெற்ற பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நம்பத்தகுந்த விசாரணையும் அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக் கூடானதோ அல்லது தற்காலிக சிறப்பு தீர்ப்பாயத்துக்கூடானதுமான நீதிமுறைச் செயற்பாட்டின் மூலமே பரிகாரம் காணப்பட வேண்டும். இதற்கு எந்தவிதத்திலும் குறைவான தரத்திலான விசாரணையானது, மனிதாபிமான சட்டத்தின் பிரயோகத்தையும் சர்வதேச நீதிக்கோட்பாட்டையும் பலவீனமடையச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.  

அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

'உண்மையை கண்டறிவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்குமான இலங்கையின்; தேசிய பொறிமுறைகள் அனைத்தும் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததுள்ளது எனக் குறிப்பிடும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின்; முடிவுரையின் 72ஆவது பந்தியை நாம் வரவேற்கிறோம். அத்துடன், போதிய கால அவகாசமில்லை என்றோ தொழில்நுட்ப ஆற்றல் இல்லை என்றோ இனியும் காரணம் கூறமுடியாது. ஏனெனில், இது அரசியல் விருப்பு தொடர்பான கேள்வி என்றும் குறிப்பிட்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் முடிவுரையை நாம் வரவேற்கிறோம்.

அரசியல் விருப்பின்மை என்பது தனித்து இந்த அரசாங்கத்தின் இயல்பு மட்டுமல்ல. மாறாக இது இலங்கை அரசை கட்டமைக்கும் சிங்கள தேசத்தின் பொதுவான குணாம்சம் என்பதை நாம் மீளவலியுறுத்துகிறோம். எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியை சார்ந்த அரசாங்கமாவது உள்ளக பொறிமுறைகள் மூலம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் என எதிர்பார்ப்பதில் எத்தகைய பயனும் இல்லை என்பதை நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

எது எப்படியிருப்பினும், மீள்நல்லிணக்கத்திற்கான தீர்வாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என குறிப்பிடும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக எமது ஏமாற்றத்தை தெரிவிக்கிறோம்.

தமிழ், சிங்கள சமூகங்களுக்கிடையிலான இன்றைய உறவு நிலையானது தமிழ்ச் சமூகத்தின் மீதான சிங்கள சமூகத்தின் மேலாதிக்கமாகவே காணப்படுகின்றது. சிங்கள தேசமானது தமிழ்த் தேசத்தை சிங்கள தேசத்திற்குள் ஒன்றுகலக்கும் தனது கொள்கையை, குறிப்பாக தமிழரின் சுயநிர்ணய உரிமை அரசியலை குற்றவியல் செயற்பாடாக்குவது மற்றும் நில அபகரிப்பினூடாக தமிழர் தாயகத்தை சிங்களமயமாக்குவது போன்ற வடிவங்களில்; தொடர்ச்சியாக செய்துவருகின்றது. இந்த ஒடுக்குமுறையின் பொதுவான சூழல் பாலியல் வன்முறை, பாலியல் பலாத்காரம் மற்றும் சித்திரவதை என்று தொடர்கிறது.

தமிழ் மக்களை பொறுத்தவரை மீள்நல்லிணக்கம் என்பது மேலாதிக்கமாகவே தென்படுகிறது. தங்களின் விவகாரங்களினை தாமே கட்டுப்படுத்தக்கூடிய வகையில் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் ஊடாக சுயாட்சியை வழங்குவதே தமிழ் மக்களின் வாழ்வில் இயல்பு நிலைமை திரும்புவதற்கான ஒரேயொரு வழிமுறையாகும்' என்றார்.   
 
அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் ஆற்றிய உரையில், 

'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருடைய சர்வதேச நம்பத்தகுந்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரையை வரவேற்கும் அதேவேளை, இவ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்படவிருக்கும் தீர்மான வரைபில் சர்வதேச விசாரணை பொறிமுறை பற்றி குறிப்பிடப்படாமையால் நாங்கள் அதிருப்தி அடைகிறோம்.

இத்தீர்மான வரைபில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலவரை பற்றியும் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் இன அழிப்பு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற ஆணையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்காமை தொடர்பிலும் கவலையடைகிறோம்.

மேலும், நாங்கள் தீர்மானத்தின் செயற்பாட்டு பந்தி 8 ஆ வில், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களை விசாரிப்பது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படாமை தொடர்பிலும் நாம் ஆதங்கம் அடைகிறோம்.

குறித்த தீர்மானத்தின் செயற்பாட்டு பந்தி 6 இல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மாகாண சபைகள் முறை தொடர்பில் குறிப்பிடப்பட்டிருப்பதானது, இலங்கை அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டமானது அரசியல் தீர்வுக்கு ஓர் ஆரம்பப் புள்ளியாக அமையும் என்ற மாயையை நிலைபெறச்செய்கிறது.

சுயநிர்ணய உரிமையையும் தமிழர் தேசத்தையும் தமிழர் தாயகத்தையும் அங்கீகரிக்கக்கூடிய இலங்கையில் இருக்கின்ற வௌ;வேறான தேசங்களுக்கிடையிலான புதிய ஒரு சமூக அரசியல் ஒப்பந்தமே நிலையான அரசியல் தீர்வாக அமையும் என நாங்கள் வலுவாக நம்புகிறோம்.

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையோ அல்லது இங்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தீர்மானமோ தமிழர் தேசத்துக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இன அழிப்பை தடுத்து நிறுத்துவது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படாமையானது எம்மை ஆழமாகக் கவலையடையச் செய்துள்ளது.

தொடரும் இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஊடாக தமிழர் தாயகத்தில் ஒரு நிலைமாற்று நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்துவதே ஒரேயொரு வழியென நம்புகிறோம். இவ் மனித உரிமைகள் பேரவையானது தமிழ்மக்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்குமாயின், இச்சபையானது ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்திற்கு இத்தகைய நிலைமாற்று நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் பாதுகாப்புச் சபைக்கு பிரேரிக்குமாறு பரிந்துரை செய்ய வேண்டும்' என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .