2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யானைகள் அட்டகாசம்; காப்பாற்றுமாறு வடகாடு மக்கள் கோரிக்கை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மாலை மற்றும் இரவு வேளைகளில் கிராமத்துக்குள் புகும் காட்டு யானைகள், தங்களது இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இந்த யானைகளின் தொல்லைகளிலிருந்து தங்களை காப்பாற்றுமாறும் செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வடகாடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை (23) வடகாடு கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அக்கிராம மக்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அக்கிராம மக்கள் , ஆனந்தன் எம்.பி.யிடம் மேலும் கூறியதாவது,

1977ஆம் ஆண்டு தென்னிலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறைத் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களில் 125 குடும்பங்கள் வடகாட்டில் குடியேறிய நிலையில் வடக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு மீண்டும் இடம்பெயர்ந்து வன்னி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசித்து 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீளக்குடியமர்ந்தோம்.

தற்சமயம் தினக்கூலிக்கு வேலை செய்து வரும் தமக்கு, தமது கிராமத்தில் அண்மையில் புனரமைக்கப்பட்டுள்ள காயாகுளத்துக்கு கீழுள்ள காடுகளை துப்பரவு செய்து நிலங்களை பகிர்ந்தளித்து தந்தால், அக்குளத்து நீரைக்கொண்டு காலபோக பயிர்ச் செய்கைகளில் ஈடுபட பெரிதும் உதவியாக அமையும்.

அத்துடன், தமது கிராமம் காடுகளால் சூழப்பட்டுள்ளதால், மாலை வேளையானதும் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து தமது உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலையும்  பயிர்களுக்கு பெரும் அழிவுகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

எனவே, யானைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து விடுபட்டு தாம் பாதுகாப்பாக வசிக்க தமது கிராமத்துக்கு மின்சார வசதியை ஏற்படுத்தி தருவதோடு, கிராமத்தின் உள்ளக வீதிகளை புனரமைத்து தருமாறும் அம்மக்கள் இதன்போது வலியுறுத்தினர்.

மேலும், தமது கிராமத்திலிருந்து பூவரசங்குளம் மகா வித்தியாலயத்துக்கு கல்வி கற்க செல்லும் மாணவர்களை மன்னார் - வவுனியா பாதையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமாக பஸ்களும், தனியார் பஸ்களும் ஏற்றாமல் செல்வதால், மாணவர்கள் பாடசாலை செல்லாமல் வீடுகளுக்கு திரும்பி வந்து விடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், தமது கிராமத்துக்கென்று போக்குவரத்து வசதிகள் செய்து தந்து தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது அம்மக்களுக்கு பதிலளித்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி, 'செட்டிக்குளம் பிரதேச செயலாளருடனும, தொடர்புடைய அதிகாரிகளுடனும் பேசி மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

கொக்கச்சான்குளம் தமிழ் கிராமத்தை கலாபோபஸ்வெள எனப்பெயர் மாற்றம் செய்து, அங்கு சட்ட விரோதமாக குடியேற்றியுள்ள சிங்கள மக்களை, யானைகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பதற்காக 26.7 மில்லியன் ரூபாய் பணத்தை மின்சார வேலி அமைக்க அரசு ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X