2025 ஜூலை 16, புதன்கிழமை

ஊர்வலத்துக்கு தடை

George   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினத்தையொட்டி ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் அனுப்பி வைப்பதற்காக, வவுனியா அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளிப்பதற்காக, இன்று சனிக்கிழமை (30) வவுனியா நகரசபை மைதானத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலம் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை மண்பத்தில் இன்று காலை காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினத்தையொட்டி வட மாகாணத்தின் ஐந்து பிரஜைகள் குழு மற்றும் காணாமல் போனோரின் உறவுகளின் இணையம் ஆகியவற்றினால் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் செபமாலை அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காணாமல் போனோரின் உறவினர்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டிருந்ததுடன் அரசியல் பிரதிநிதிகளும் மனிதா உரிமை செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் அனுப்பி வைப்பதற்காக வவுனியா அரசாங்க அதிபரிடம் மகஜரொன்று கையளிப்பதற்காக, ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகம் வரை செல்வதற்கு தீர்மானித்து நகரசபை மண்டபத்திற்கு வெளியில் வந்ததும் பொலிஸார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனிடம் ஊர்வலமாக செல்ல அனுமதி இன்மையால் அவ்வாறு செல்ல வேண்டாம் என கூறியுள்ளனர்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் நாம் எவருக்கும் தொந்தரவின்றி வீதியோராமாக செல்வதாக தெரிவித்து நடந்து சென்றனர். இதனையடுத்து, நகரசபை வாயிலுக்கு அருகாமையில் கலவரத்தடுப்பு பொலிஸாரினால் தடைகள் போடப்பட்டுள்ளது.

இதன்போது ஊர்வலமாக சென்றவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் கலவரத்தடுப்பு பொலிஸாரை தள்ளியவாறு சிலர் கடந்து சென்றனர்.

ஏனையோரை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் ஒவ்வொருவராக செல்லுமாறு பணித்தனர். இதன் பின்னர் பகுதி பகுதியாக வந்தவர்கள் மீண்டும் ஏ9 வீதிக்கு அருகாமையில் வைத்து ஒன்று திரண்டு பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக செல்ல முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ஊர்வலமாக செல்ல மீண்டும் பொலிஸார் தடை விதித்ததுடன் இதனால் ஊர்வலமாக சென்றவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மீண்டும் முறுகல் ஏற்பட்டது.

இந் நிலையில் ஊர்வலமாக சென்றவர்கள் வீதியின் குறுக்காக அமர்ந்து கொண்டதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் போக்குவரத்திற்க தடை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஏ9 வீதியில் நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் மகஜர் கையளிக்கப்பட்ட பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X