2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தோழமையுடனும் புதுப்பிக்கும் உணர்வுடனும் இலங்கையர்கள் திரும்பி வந்துசேர வேண்டும்: பாப்பரசர்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 15 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


போரின் முடிவில் அன்னையின் திருச்சொரூபம் மடு திருத்தலத்துக்கு மீண்டும் வந்தது போல அன்னையவரின் அனைத்து இலங்கை மக்களும் தோழமையுடனும் புதுப்பிக்கும் உணர்வுடனும் இறைவனிடம் திரும்பி வந்துசேர மன்றாடுகின்றோம் என பரிசுத்த பாப்பரசர் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தந்த பாப்பரசர் நேற்று புதன்கிழமை (14) மாலை மடு திருத்தலத்துக்கு  வருகை தந்து இலங்கை மக்களுக்கு ஆசி வேண்டி ஆராதனையில் ஈடுபட்டார். இதனையடுத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பாப்பரசர், 'சகோதர, சகோதரிகளே, நாம் நம் அன்னையின் இல்லத்தில் இருக்கின்றோம். மருதமடு அன்னையின் திருத்தலத்தில் ஒவ்வொரு திருப்பணியும் தம் சொந்த வீட்டில் இருப்பது போல உணர முடியும். ஏனெனில், இன்று தான் மரியாள் தமது திருமகன் யேசுவின் பிரசனத்திற்கு நம்மை கூட்டிச்செல்லுகின்றார்.

தமிழர்களும், சிங்கள மக்களும் இலங்கையராக ஒரே குடும்பத்தின் உறுப்பினராக இங்கு வருகை தருகின்றனர். தமது இன்ப, துன்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர். இலங்கை நாட்டின் இதயத்தையே பிழந்த நீண்ட கால போரினால் துன்பப்பட்ட குடும்பங்கள் இன்று இங்கு பிரசன்னமாகி இருக்கின்றனர்.

பயங்கர வன்முறை மற்றும் இரத்தக்கலரிகளின் ஆண்டுகளில் வடக்கு மற்றும் தெற்கில் எத்தனையோ மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்திருத்தலத்தோடு சம்மந்தப்பட்ட துயர நிகழ்வுகளை எந்த ஓர் இலங்;கையரும் மறக்கவே முடியாது. இலங்கையில் ஆரம்ப கிறிஸ்தவர்களின் வருகையோடு தொடர்புடைய வணக்கத்துக்குரிய மரியாளின் திருவுருவம் அவரின் திருத்தலத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது. அந்த சோகமான நாளையும் மறக்கவே முடியாது. ஆனாலும் கூட நம் அன்னை நம்மோடு எப்போதும் உடன் இருந்தார்.

ஒவ்வொறு இல்லத்திலும் காயப்பட்ட ஒவ்வொறு குடும்பத்திலும் அமைதியான வாழ்க்கை வாழ விரும்பும் அனைவருக்கும் அவர் அன்னையாக இருக்கின்றார். இலங்கை வாழ் மக்களை கடந்த காலத்தின், நிகழ்காலத்தின் அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் காப்பாற்றி வருவதற்கு இன்று நாம் அவருக்கு நன்றி கூறுகின்றோம்.

நம் அன்னையின் பிரசன்னத்திற்காக இன்று நாம் அவருக்கு நன்றி கூற முனைகின்றோம். காயங்களை குணமாக்கி உடைந்த உள்ளங்களிலே அமைதியை மீண்டும் தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் யேசு மட்டும். அவரை நமக்கு தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் நம் அன்னைக்கு நன்றி கூறுகின்றோம்.

மேலும் இறை இரக்கத்தின் அருளை நம் மீது பொழிந்திட வேண்டுகின்றோம். அத்துடன்; நம் பாவங்கள்,மற்றும் முன்பு மேற்கொண்ட அனைத்து தீமைகளுக்கும் பரிகாரம் செய்ய தேவையான அன்பை நாங்கள் வேண்டுகின்றோம். இதனைச் செய்வது இலகுவானதல்ல. ஆனாலும் கூட ஒருவரை ஒருவர் உண்மையான மனதுடன் அனுகவும் உண்மையான மன்னிப்பைக் கொடுக்கவும் அதனை நாடவும் இவ்வாறாக நாம் இறை அருளை பெற்றுக்கொள்ள முடியும்.

மன்னிக்கவும் சமாதானத்தை அடைவதற்குமான கடினமான இந்த உணர்ச்சியிலே அன்னை மரியாள் இங்கிருந்து நம்மை ஊக்கமூட்டுகிறார். வழி நடத்துகிறார். அழைத்துச் செல்லுகின்றார். தமிழ், சிங்கள மொழி பேசும் சமூகங்களை உள்ளடக்கிய இலங்கை மக்கள் இழந்துவிட்ட ஒற்றுமையினை மீண்டும் கட்டியெழுப்புகின்ற முயற்சியில் அன்னை மரியாள் தன் பரிந்துரைகள் படியாக துணை நிற்க வேண்டுகின்றோம்.

போரின் முடிவில் அன்னையின் திருச் சொரூபம் மடு திருத்தலத்திற்கு மீண்டும் வந்தது போல அன்னையவரின் அனைத்து இலங்கை மக்களும் தோழமையுடனும் புதுப்பிக்கும் உணர்வுடனும் இறைவனிடம் திரும்பி வந்து சேர மன்றாடுகின்றோம்.
நாம் ஒருவர் ஒருவருக்காக மன்றாடுவோம். இந்த திருத்தலமானது செபத்தின் இல்லமாக அமைதியின் இருப்பிடமாக திகழ வேண்டுவோம். மருதமடு அன்னையின் பரிந்துரையால் ஒப்புறவு, நீதி, சமாதானம் நிறைந்த எதிர்காலம் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரித்தாவதாக' என தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .