2025 ஜூலை 14, திங்கட்கிழமை

யாழ். உணவுப் பாதுகாப்பு இரணைமடுக் குளத்திலேயே தங்கியுள்ளது: ஐங்கரநேசன்

George   / 2015 ஜனவரி 17 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

இரணைமடு குளத்திட்டத்தின் நோக்கம், கிளிநொச்சி மாவட்டத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்வது மாத்திரமல்ல. யாழ்ப்பாணத்துக்கான உணவுப் பாதுகாப்பும் இரணைமடு குளத்திலேயே தங்கியுள்ளது. இதனாலேயே இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் எடுத்து வரும் மத்திய அரசின் திட்டத்துக்கு பதிலாக நாம் மாற்றுத்திட்டத்தை முன்வைக்க நேர்ந்தது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

இரணைமடுக்குளத்தின் 95ஆவது வருடத்தையொட்டி 95 பானைகள் வைத்துப் பொங்கும் மாபெரும் பொங்கல் விழா, இரணைமடு கனகாம்பிகை ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை (16)இடம்பெற்றது. 

இப்பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது,

இரணைமடுக்குள  நீர்ப்பாசனத்திட்டம் 1920ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இதன் பிரதான நோக்கமாக யாழ்ப்பாணத்துக்கான உணவு பாதுகாப்பே முன்னுரிமை பெற்றிருந்தது. 

யாழ். மாவட்டம் நிலப்பரப்பு குறைவாகவுள்ள அதேசமயம், சனத்தொகை மிக அதிகமாக உள்ளது. அத்தோடு யாழ்ப்பாணத்தில் பெரிய நீர்ப்பாசன குளங்களும் இல்லை. இதனால் யாழ். மாவட்ட மக்களுக்கு சோறு போடுவதற்கு தேவையான நெல்லை யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்ய முடியாது. 

இதனாலேயே கிளிநொச்சியில் நெல்லை விளைவித்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கும் நோக்குடன் இரணைமடு நீர்ப்பாசனத்திட்டம் இலங்கையின் முதலாவது திட்டமிடப்பட்ட நீர்ப்பாசனத் திட்டமாக உருவாக்கப்பட்டது. 

யாழ்ப்பாணத்துக்கான அரிசி தேவையின் அதிகரிப்புக்கு ஏற்ப காலத்துக்குக்காலம் இரணைமடுக் குளத்தின் கொள்ளளவு அதிகரிக்க செய்யப்பட்டது. அத்தோடு யாழ்ப்பாண குடித்தொகையின் அளவை குறைக்கும் நோக்கில், கிளிநொச்சியை மையமாக கொண்டு படித்த வாலிபர்; திட்டம், குடியேற்றத்திட்டம் என்று குடிப்பரம்பல் செய்யப்பட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.

இப்போது இரணைமடுக்குளத்தின் கீழ் 22,000 ஏக்கருக்கு நீர்ப்பாசனவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 12,000 ஏக்கருக்கு நீர்ப்பாசன வசதி செய்து கொடுக்கப்படவேண்டிய தேவையுள்ளது. சிறுபோகத்தை முழுமையாக விளைவிக்க முடியாத நிலையிலேயே இரணைமடுக்குள விவசாயிகள்  உள்ளனர். 

இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டால், இரணைமடுக்குளத்தின் கீழ் செய்யப்படும் நெற்செய்கை மோசமாக பாதிக்கப்படும். இதனால், யாழ்ப்பாணத்துக்கான உணவுப்பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். 

இப்படி உணவுக்காக நாம் யாரிடமும் கையேந்தக்கூடிய சூழ்நிலை உருவாகக்கூடாது என்பதற்காகவே மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட இரணைமடு – யாழ். குடிநீர் திட்டத்துக்கு பதிலாக வடக்கு மாகாண சபையால் மாற்றுத்திட்டம் ஒன்றை முன்வைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. 

இப்போது நாம் முன்வைத்த ஆலோசனைகளை ஆசிய அபிவிருத்தி வங்கியும், மத்திய அரசின் நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சும் ஏற்றுக் கொண்டுள்ளது. இரணைமடுக்குள விவசாயிகள் எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் ஒற்றுமையாக நின்று உறுதியாகக் குரல் கொடுத்ததாலேயே இது சாத்தியம் ஆகியது என அமைச்சர் தெரிவித்தார். 

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மாகாணசபை உறுப்பினர் ப.அரியரத்தினம், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. ந.சுதாகரன், இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் செ.சிவப்பிரகாசம், செயலாளர் மு.சிவமோகன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .