2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மடுக்கரை கிராம வீதியை புனரமைக்குமாறு மாணவர்கள் போராட்டம்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், நாணாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது கிராமத்துக்குச் செல்லும் வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி, நேற்று (10) செவ்வாய்க்கிழமை பாடசாலைக்குச் செல்லாது சீருடையுடன் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் நாணாட்டான் மகா வித்தியாலயத்தில் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர். நாணாட்டானில் இருந்து மடுக்கரை கிராமத்துக்குச் செல்லும் பிரதான வீதி பாதிப்படைந்துள்ளமையினால் நாணாட்டானில் இருந்து மடுக்கரை கிராமத்திற்கான அரசம ற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் பல மாதங்களாக தடைப்பட்டுள்ளன.

வீதிகள் பாரிய குன்றும் குழியுமாக காணப்படுவதோடு போக்குவரத்துச் சேவைகள் இடம்பெற முடியாத வகையில் காணப்படுகின்றது. போக்குவரத்துச் சேவைகள் இல்லாமையினால் மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் சுமார் 5 கிலோமீற்றர் தூரம் வரை நடந்து பாடசாலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மடுக்கரை கிராமத்தில் உள்ள பொது அமைப்புக்கள், மடுக்கரை கிராம மாணவர்கள், நாணாட்டான் மகா வித்தியாலய நிர்வாகத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து, குறித்த வீதியை புனரமைத்து தருமாறு கோரி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை அதிகாரிகள் ஆகியோரிடம் பல தடவை நேரடியாகவும் ,எழுத்து மூலமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் குறித்த வீதி உரிய முறையில் புனரமைக்கப்படவில்லை. இதனால் இந்த  கிராமத்துக்கான போக்குவரத்துச் சேவைகள் நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்தது. இதனால் மடுக்கரை கிராம மக்கள் உட்பட அக்கிராம மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்ததோடு மடுக்கரையில் இருந்து நாணாட்டான் பகுதிக்கு நடந்துவரும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நாணாட்டானில் இருந்து மடுக்கரை கிராமத்துக்குச் செல்லும் வீதியை புனரமைத்து போக்குவரத்து வசதிகளை உடன் ஏற்படுத்தித்தருமாறு கோரி மடுக்கரை கிராமத்தில் இருந்து நாணாட்டான் பாடசாலைக்குச் செல்லும் சுமார் நூற்றுக்கனக்கான மாணவர்கள் நேற்று பாடசாலைக்குச் செல்லாமல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

காலை 10 மணியளவில் நாணாட்டான் பஸார் பகுதியில் ஒன்றுகூடிய மாணவர்களும் அவர்களது பெற்றோரும் பிரதேச செயலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

பின்னர், நாணாட்டான் பிரதேச செயலாளர் அங்கு இல்லாத காரணத்தினால் தமது பிரச்சினைகளை கூறி அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்ததுடன் நாணாட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராஜ் லெம்பேர்ட்டிடமும் தமது பிரச்சினைகளை கூறி மகஜர் கையளித்தனர். மகஜரை பெற்றுக்கொண்ட பிரதேச சபையின் தலைவர், உடனடியாக இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .