2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை காணியை அதிரடிப்படை சுவீகரிப்பு: ஆனந்தன் எம்.பி

Kanagaraj   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத், எஸ்.றொசேரியன் லெம்பேட்

வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு கீழுள்ள பூவரசங்குளம்,  பூவரசு ஆரம்ப பாடசாலைக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் காணியை அதிரடிப்படை சுவீகரித்துள்ளமையால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

பாடசாலைக்கு உரித்துடைய காணியை மட்டுமல்லாது  கட்டடம், கிணறு, மலசலகூடம் என்பவற்றையும் விசேட அதிரடிப்படையினர் தமது பயன்பாட்டில் வைத்துள்ளனர். தனியார் காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதாக புதிய அரசாங்கம் கூறுகின்ற நிலையில், பாடசாலைக்காணி, கட்டடத்திலிருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேற மறுப்பது கண்டணத்திற்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

125க்கும் மேற்பட்ட மாணவர்களைக்கொண்ட மேற்படி ஆரம்ப பாடசாலையானது பூவரசங்குளம் மகாவித்தியாலய கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகின்றது. இதனால், ஆரம்ப பாடசாலையின் கல்வி அபிவிருத்தி வளஅபிவிருத்தி உட்பட பல்வேறு விடையங்களை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டைநிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து அவர் ஊடகங்களுக்குத்தெரிவித்துள்ளதாவது:

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர விசேட அதிரடிப்படையினர் அதாவது 2010ஆம் ஆண்டிலிருந்து வவுனியா பூவரசங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பூவரசு ஆரம்ப பாடசாலையில் முகாமிட்டுள்ளனர்.

இது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்கு இடையூறாகவுள்ளது. என்பதுடன் பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தடையாய் உள்ளனர். 

கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தனியார் காணிகளில் உள்ள பாதுகாப்புத்தரப்பினர் அப்புறப்படுத்தப்பட்டு அந்தக்காணிகளை உரியவர்களிடம் கொடுப்பதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஆனால்,  யுத்தத்தினால் உண்மையில் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் வாழ்வியலோடு ஒன்றிய பாடசாலையிலிருந்து விசேட அதிரடிப்படையினரை வெளியேற்றுவதற்கு இன்னமும் அரசாங்கத்துக்கு மனம் வராமலிருப்பது கவலையளிப்பதாக உள்ளது. 

முந்தைய அரசாங்கம் காதுகொடுத்துக்கேளாதிருந்த எமது கோரிக்கைகளை புதிய அரசாங்கம் செவிமடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த வேண்டுகோளை விடுப்பதாகத்தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக காவல்துறை, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சருக்கும், பாதுகாப்புச்செயலாளருக்கும் கடிதம் எழுதியிருப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் இப்பாடசாலைக்கென '‘Room to Read’  நிறுவனத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியானது பாடசாலை சமூகத்தின் பொறுப்பில் பாடசாலைக்கான காணியும் நிரந்தர கட்டடமும் இல்லாமையால் மீளப்பெறப்பட்டுள்ளது. 

இவ்வாண்டும் UNICEF, Educational Ministry  என்பவற்றால் இரு கட்டடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாடசாலை சூழலிலிருந்து அதிரடிப்படையினர் விரைவில் வெளியேற்றப்படாவிட்டால் மீண்டும் இவ்விரு கட்டடங்களும் கட்ட முடியாத நிலை ஏற்படக்கூடும் என மேற்படி பாடசாலைச்சமுகம் அச்சம் கொண்டுள்ளது. 
இப்பாடசாலை காணியிலிருந்து அதிரடிப்படையினரை வெளியேறுமாறு 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த வடக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும், பாடசாலைக்காணியிலிருந்து படையினரை வெளியேறுமாறு 2014ஆம் ஆண்டின் இறுதியில் இரண்டு தடவைகள் பணித்திருந்தார். வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. 

இவ்வாறு பல்வேறு கோரிக்கைகள், உத்தரவுகள் விடுக்கப்பட்ட போதிலும் விசேட அதிரடிப்படையினர் காணியிலிருந்து இதுவரை வெளியேறவில்லை. தற்போதைய புதிய அரசாங்கம் தனியார் காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதாக கூறுகின்ற நிலையில், பாடசாலைக்காணி, கட்டடத்திலிருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேற மறுப்பது கண்டணத்திற்குரியது.

எனவே, உடனடியாக விசேட அதிரடிப்படையினரை வெளியேற்றி வந்த நிதி திரும்பிப்போகாமல் நிரந்தரக்கட்டடம் அமைக்க வழிவகுப்பதுடன், பின்தங்கிய கிராமப்புற சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவுமாறு பாடசாலை சமுகம் என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் தமது கற்றல் நடவடிக்கைகளை தமது சொந்த பாடசாலையில் தடையின்றி மேற்கொள்ள புதிய அரசு காலதாமதமின்றி உடன் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .