Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 பெப்ரவரி 17 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, உதவிகள் வழங்கப்பட்டு வருகின்ற போதும் பல இடங்களில் மாற்றுத்திறனாளிகள் புறந்தள்ளப்பட்டு ஒதுக்கப்படும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில், சங்கத்தினால் தொடங்கப்பட்ட முல்லை அப்பளத் தொழிலகத்தை செவ்வாய்க்கிழமை (17) திறந்துவைத்து உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது. எந்தவொரு நிறுவனத்துக்கும் இயங்க வேண்டுமென்ற ஆர்வத்தன்மை இருக்க வேண்டும். அவ்வகையில் முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் உறுதியுடன் இருப்பதன் காரணமாக அப்பளத் தொழிலகம் சிறப்பாக இயங்குமென்று நம்புகின்றேன்.
அப்பளத் தொழிலக இயங்குதலுக்கு உதவி வழங்கிய யு.என்.எச்.சி.ஆர், சேவா லங்கா நிறுவனங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தொழிலகம் அபிவிருத்தியடைவதற்கு சொந்த கட்டடத்தில் இயங்கவேண்டும்.
நிரந்தர கட்டடத்தை அமைப்பதற்கான காணியொன்றை விரைவில் பெற்று கட்டடத்தை அமைப்பதற்கு உதவிகள் செய்வோம்.
மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தொழிலகத்துக்கு வந்து செல்லக்கூடிய இடத்தை தெரிவு செய்யுங்கள். அதனை வழங்க முடியும். போரினால் தான் கூடுதலான மாற்றுத்திறனாளிகள் உருவானார்கள். நாம் பல கிராமங்களுக்கு சென்று பார்க்கின்ற போது, பொது அமைப்புகளினாலே மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை கொடுக்கப்படாத நிலைமை காணப்படுகின்றமை வேதனைக்குரியது.
வீட்டுத்திட்டம் உட்பட அனைத்து உதவிகளிலும் முன்னுரிமை கொடுத்து செயற்படுகின்ற தன்மை குறைவாகக் காணப்படுகின்றது. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கின்றது, முள்ளியவளையில் இரு கைகளையும் இழந்த பிள்ளையொன்றுக்கு நேரத்துடன் முன்னுரிமை கொடுத்து வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருக்கவேண்டும்.
தற்போதுதான் அப்பிள்ளைக்கு வீட்டுத்திட்டத்துக்கு காசு வழங்கப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்களோ மற்றும் அதிகாரிகளோ முன்னுரிமை கொடுத்து செயற்படவில்லை. மாற்றுத்திறனாளிகளை ஏனோதானோ என்று நினைப்பது காரணமாகவே இவ்வாறான தவறுகள் நடந்துவிடுகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிபுரிவதற்கு பலர் உள்ளனர். அதனை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்துக்கு உதவிபுரிவதற்கு பலர் தயாராக உள்ளனர். சரியான முறையில் செயற்படும் போது அதனை பெற்றுக்கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகளில் விசேட தேவையுடையவர்களுக்கு மலசலகூடங்களை அமைப்பதற்கு பலர் முன்வந்துள்ளார்கள். சிலவேலைகள், வள்ளிபுனம் போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. எல்லாவற்றையும் செயற்படுத்துவதற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் செயற்படவேண்டும். சகல மாற்றுத்திறனாளிகளையும் ஒன்றாக இணைத்து சிறப்பாக இயங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவி ச.சகிலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யுஎன்எச்சிஆர் மற்றும் சேவாலங்கா நிறுவனப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
5 hours ago