Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 பெப்ரவரி 22 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
அறுவடை செய்துள்ள நெல்லை நிர்ணய விலையில் விற்பனை செய்ய முடியாது நெருக்கடியில் வடக்கு விவசாயிகள் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இந்நாட்டின் ஜனாதிபதியாக விவசாய குடிமன் இருக்கும் நிலையில் வடக்கு விவசாயிகளின் பிரச்சினைக்கு நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாக உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கில் நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் அரசாங்கம் நிர்ணயித்த விலையில் நெல்லை விற்பனை செய்வதில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
நெல் சந்தைப்படுத்தும் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் வயல் நிலங்களில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்ற போதும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் நீண்டகாலத்துக்குப் பின்னர் விவசாயிகள் காலபோக நெற்செய்கையில் அதிகமாக ஈடுபட்டனர்.
வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் கடன்களைப் பெற்று பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் நெற்செய்கையை மேற்கொண்டிருந்தனர்.
பருவ மழையும் கைகொடுக்க இம்முறை வடக்கு விவசாயிகள் நெற்செய்கையில் கூடுதலான நிறைவைப்பெற்று தற்போது அறுவடையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக, அதிகரிக்கப்பட்ட விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை நிக்கவெரட்டிய நெல் விற்பனை சபை கிளையில் உணவு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தலைமையிலான உத்தியோகபூர்வமாக கடந்த வியாழக்கிழமை (19) ஆரம்பமானது.
புதிய அரசாங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட விலையின் பிரகாரம் சிவப்பு நாடு, வெள்ளை நாடு கிலோ 40 ரூபாவாகவும் (ஒரு மூடை நெல்லு 2,800 ரூபாவுக்கும்,) சம்பா கிலோ 45 ரூபா வீதமும் (ஒரு மூடை நெல்லு 3,150 ரூபாவுக்கும்), கீரிசம்பா கிலோ 50 ரூபா வீதமும் (ஒரு மூடை 3,500 ரூபாவுக்;கும்) விவசாயி ஒருவரிடமிருந்து 2,000 கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் வடக்கு விவசாயிகள் தமது நெல்லை நிர்ணய விலையில் அரசாங்கத்தின் மாவட்ட பிரதிநிதிகளுக்கோ, நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாகவோ அல்லது பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகவோ விற்பனை செய்யமுடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
இதற்கான காரணம் தொடர்பில் மாவட்ட செயலங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய போது திறைசேரியிலிருந்து நிதி கிடைக்கவில்லை என கூறப்பட்டுள்ளதுடன் அந்நிதி எப்போது வழங்கப்படும் என்பது குறித்த விவரமும் அறிவிக்கப்படாத நிலமை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், நெல் சந்தைப்படுத்தும் சபைக்கே திறைசேரியிலிருந்து நேரடியாக நிதி அனுப்படுவதால் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களும் நெல் கொள்வனவில் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.
எனினும், நெல்லை அறுவடை செய்த விவசாயிகள் தாம்பெற்ற கடன்களை மீளளிக்க வேண்டிய தேவை காணப்படுவதுடன் களஞ்சியப்படுத்தும் வசதியின்மையால் அதனை பாதுகாக்க முடியாது தனியார் கொள்வனவாளர்களிடத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் பெரும் நட்டத்துக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்கத்தின் நிர்ணய விலையிலும் பார்க்க கூடிய விலையில் தற்போதைய அரசாங்கம் கொள்வனவு விலையை நிர்ணயித்துள்ளமை ஆக்கபூர்வமான செயற்பாடாக காணப்படுகின்றபோதும் நெல் அறுவடை ஆரம்பமாகிய தினம் முதல் உரியவகையில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு கொள்வனவை மேற்கொள்ளும் செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக அமையவில்லை.
குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்போது தமது எதிர்கால வாழ்வாதரத்தை கட்டியெழுப்புவதற்காக நெருக்கடிகளுக்கு மத்தியில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
எதிர்வரும் நாட்களின் மீண்டும் சிறுபோகத்துக்கான பருவமழை ஆரம்பிப்பதற்கு சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. எனவே, அரசாங்கம் திறைசேரி ஊடாக நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு உரிய நிதி வளத்தை வழங்கி அதனூடாக இவ்விவசாயிகளின் அறுவடை நெல்லை உடன் கொள்வனவு செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
அதேநேரம் விவசாயியொருவரிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லின் அளவை மேலும் அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
இந்நாட்டின் அதியுச்ச பதவியான ஜனாதிபதி ஆசனத்தில் பொலநறுவையில் பிறந்த மரபியல் ரீதியான விவசாயக் குடிமகனே அமர்ந்துள்ளார். விவசாயிகளின் ஒவ்வொரு வியர்வைத்துளியின் பெறுமதியையும் நன்கறிந்த இவர் தலைமையிலான ஆட்சி அனைத்து விவசாயிகளுக்கும் பொற்காலமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
வடக்கு விவசாயிகளின் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வளிக்கவேண்டியது அவருடைய கடமையாகின்றது என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
5 hours ago