2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'இலங்கையில் உள்ளவர்களின் மீள்குடியேற்றத்தின் பின்னரே, இந்திய அகதிகள் தொடர்பில் கவனம் செலுத்துவோம்'

Gavitha   / 2015 பெப்ரவரி 26 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இலங்கையில் உள்ளவர்களின் மீள்குடியேற்றத்தின் பின்னரே, இந்திய அகதிகள் தொடர்பில் கவனம் செலுத்துவோம் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

வவுனியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு வியாழக்கிழமை (26)  வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு வருகைதந்த அவர் அங்குள்ள மக்களை சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடபகுதி உள்ளிட்ட இப்பகுதி மக்களுக்கு மீள்குடியேற்றம் தொடர்பான நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நாம் கதைத்துப் பேசி காலத்தை கடத்தாமல் இங்குள்ள மக்கள் விரும்பும் படியாக பேசி தீர்வு காணவேண்டும் என தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து அகதிகளை வரவழைப்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது,

இந்தியாவில் இருந்து இங்கு வர 20 தொடக்கம் 30 வீதமானவர்களே வர விருப்பம் தெரிவிக்கின்றனர். அவர்கள் எங்கு இருக்கப்போகின்றனர்,  அவர்களுக்கு இடம் என்ன, அவர்களின் வசதிகள் என்ன என்று அறிந்துதான் அவர்களை வரவழைப்போம்.

அவர்களை அழைத்து வருவதற்கு முன்னர், வவுனியா, கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையிலும்  மீள்குடியேற்றம் செய்யப்படாமல் உள்ளவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும். அவர்கள் இழந்த காணிகளை திரும்பவும் கொடுக்க வேண்டும். அந்த கடமைகளை தான் முதலில் நாம் செய்வோம்.

அதன் பின்னர் இந்திய அரசின் ஒத்துழைப்புடன் நாம் ஒரு முடிவுக்கு வருவோம். அவ்வாறு வருபவர்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதன் பின்னரே வரவழைக்க முடியும் அவ்வாறு இல்லாமல் அவர்களை வரவழைக்க முடியாது.

இதனைவிட இந்தியாவில் இருந்து வரவுள்ளவர்களுக்கு கிளிநொச்சியிலோ, யாழ்ப்பாணத்திலோ, வவுனியாவிலோ காணி இருக்குமாயின் அவாகள் வருவதில் எனக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை. அவ்வாறு இல்லாமல் எதுவும் இல்லாமல் வந்து எவ்வாறு வாழப்போகின்றார்கள் என தெரிவித்தார்.

இதேவேளை இந்திய வீட்டுத்திட்டத்தில் முறைக்கேடுகள் இடமபெற்றுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் உங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கின்றார். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர் கேட்டபோது,

இந்திய விட்டுத்திட்டத்தில் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தார்கள். உண்மையில் அது அரசாங்கத்தின் பிரச்சனை இல்லை. அது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் பிரச்சனையே. அவ்வாறான பிரச்சனை தொடர்பில் கேட்டு அதற்கு ஓர் முடிவு கொண்டு வரப்படவேண்டும்.

பூந்தோட்டம், சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேட்ட போது,

வவுனியா பூந்தோட்டம், சிதம்பரபுரம் முகாம் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களின் இணக்கப்பாட்டுடன் அரச அதிகாரிகளுடனும் கதைத்து இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என எமக்கு தெரியும். கடந்த காலத்தைப் போல் பேசி பேசி காலத்தை கழிக்காமல், இது தொடர்பான நிலைப்பாட்டை ஆராய்ந்து தெளிவுபடுத்துமாறு கோரியுள்ளேன். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக வவுனியா வாழ் மக்கள் ஒன்றாக முடிவெடுத்து என்ன செய்லாம் என தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது, வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ்பாறுக் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .