2025 ஜூலை 12, சனிக்கிழமை

சமஸ்டி அந்தஸ்து ஆட்சேபிக்க முடியாதது: நாங்கள் இயக்கம்

Gavitha   / 2015 மார்ச் 08 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

சமஸ்டி அந்தஸ்து ஆட்சேபிக்க முடியாதது என்று நாங்கள் இயக்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு மின்னஞ்சலொன்றை அனுப்பி வைத்துள்ளது.

'இனப்படுகொலைக்கு பரிகார நீதியையும் அரசியல் தீர்வுக்கு பொதுஜன வாக்கெடுப்பையும் கோருகின்றோம் என்ற தலைப்பில் கடந்த திங்கட்கிழமை (02) அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மனித உரிமைகளை பாதுகாத்தல், ஊக்குவித்தல், அனுசரித்து நடந்துகொள்ளுதல் தொடர்பில் சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் அதிகளவிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற போதிலும்  சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை பற்றிய உலகப்பிரகடனங்கள் மீதான பாரிய மீறுகைகள், அடிப்படைச் சுதந்திரங்களுக்கான உலக மதிப்பை பரிசுத்தமாக மேம்படுத்தும் கடப்பாடுகளில் ஸ்ரீலங்கா அரசு தொடர்ச்சியாக தவறிழைத்தே வந்திருக்கின்றது/வருகின்றது.  

சமகாலத்திலும் கூட, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்பட்டு  கொண்டிருக்கின்ற மக்கள், அச்சம்பவங்களை வெளி உலகுக்கு பகிரங்கப்படுத்த முனைகின்றனர். 

ஆனால், இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலப்படுகொலைகள், மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கேள்விக்குட்படுத்த  முடியாத ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் கூட, 'ஸ்ரீலங்கா அரசாங்கம் மீது சர்வதேச விசாரணை பொறிமுறையை ஏன் நடைமுறைப்படுத்த முடியவில்லை?' என்ற கேள்வி பெரும் உறுத்தலாக தொக்கு நிற்கின்றது. 

இதனால், புதிய சாட்சியங்கள் எங்கே சென்று முறையிடுவது? யாரிடம் நீதி கேட்பது? எனும் கலக்கத்தில் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதைகள், படுகொலைகள், வன்முறைகள் தொடர்பில் பேசுவதற்கு முன் உந்தப்படுகிறார்கள் இல்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கால ஒத்திவைப்புகள் தமிழ்மொழி பேசும் மக்களின் எஞ்சிய வாழ்க்கையை, நம்பிக்கையீனங்களாலும் ஏமாற்றங்களாலும் இட்டு நிரப்பிக்கொண்டிருக்கின்றது. 

'இலங்கையில் மாறி வரும் நிலைமைகளில் ஐ.நா. விசாரணை அறிக்கையை காலநீடிப்புச்செய்வது, அறிக்கையை பலப்படுத்தும் வகையில் மேலும் ஆதாரங்கள் கிடைக்கத்துணைபுரியும்' என்று கூறுவது, புதிய சாட்சியங்களின் தன்முனைப்பு உந்துதலை கட்டுப்படுத்தும்  மழுங்கடிக்கும் செயலும் ஸ்ரீலங்கா அரசுக்கு பொறுப்புக்கூறல்களிலிருந்து தப்பிப்பிழைத்திருப்பதற்கு நம்பிக்கையுடன் கூடிய நல்லபல வாய்ப்புகளை வழங்கும் செயலும் ஆகும். 

இந்தக்கால நீடிப்பு, 'விசாரணையையும் விசாரணை தொடர்பிலான அறிக்கையையும் நீர்த்துப்போகச்செய்யும்' எனும் ஐயத்தையும் அச்சத்தையும் தமிழ்மொழி பேசும் மக்களை ஆக்கிரமிப்புச்செய்துள்ள சமவேளையில், ஸ்ரீலங்கா அரசுக்கு தமிழின அழிப்புக்கு மறுபடியும் மறுபடியும் ஊக்குவிப்பையும் மகிழ்ச்சியையும் பரிபாலனம் செய்துள்ளது. 
'ஐ.நா. சபையும் அதன் நிபுணர்குழுவும் இலங்கைக்குள் வந்து அரச வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து வாக்குமூலங்களை பதிவுசெய்யலாம்' என்று, இன்றுவரையில் ஸ்ரீPலங்காவின் புதிய அரசு மனம் ஒப்பி கூறாதநிலையில், 'முன்னைய அரசாங்கத்தைப் போலல்லாது ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் குறித்த பல விடயங்களில் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளதாக' ஐ.நா. கூறுவது, இலங்கையின் புதிய அரசாங்கத்தை தக்கவைப்பதற்காக எவ்வளவு விட்டுக்கொடுப்புகளையும் இலகுபடுத்தல்களையும் செய்வதற்கு தாம் தயார் என்பதான செய்தியையே வெளிப்படுத்துகின்றது. 

மனித உரிமைகள் பற்றி பேசுவோர், சமாதானம் குறித்து கவலைகொள்வோர், உலக அமைதிக்காக தமது வாழ்நாளை அர்ப்பணம் செய்தோர் இலங்கையில் நடந்தது, நடைபெற்றுக் கொண்டிருப்பது இருபத்தோராம் நூற்றாண்டின் கட்டமைக்கப்பட்ட மாபெரும் 'இனப்படுகொலை' என்றே உறுதி செய்கிறார்கள். 

மாறாக, உலகத்தினுடைய மொத்த மனச்சாட்சியையும் உலுக்கிப்போட்டிருக்கும் இலங்கையில் இடம்பெற்றுள்ள மானுடப்பேரவலத்துக்கெல்லாம் கொடுக்கவேண்டிய அக்கறைகள், செய்யப்படவேண்டிய மீட்பு முயற்சிகள் குறித்து, ஐ.நா. சபை காட்டும் அசிரத்தை, வன்முறைகள், படுகொலைகள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டுள்ள உலக சமூகங்கள் எல்லாம் 'பொதுநீதியை' பெற்றுக்கொள்ளும் சர்வதேச வழிமுறையை கேள்விக்குற்படுத்துகிறது. 

தமிழ்மொழி பேசும் மக்கள் தமது வாழ்வுரிமை பிரச்சினைகள் தொடர்பிலும் தமது இருப்புக்கான போராட்டம் தொடர்பிலும் நியாயங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்புவித்த போதெல்லாம்  'ஸ்ரீலங்கா அரசை கண்காணித்துக்கொண்டிருக்கின்றோம், ஸ்ரீலங்கா அரசை அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்.' என்றே சர்வதேச சமூகம் பிரசங்கம் செய்து வந்திருக்கின்றது. 
'கண்காணிப்பு-அவதானிப்பு' கையாலாகாத்தனத்தின் நாகரிக முலாம் பூசப்பட்ட இந்தச்சொல்லாடல்களே, இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு 'குழிப்படுக்கையையும் மண் போர்வையையும்' பரிசளித்துள்ளது. 

ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட 'இனப்படுகொலைகள்' தொடர்பாகவும் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும் போர்க்கால மீறல்கள் தொடர்பாகவும் ஐ.நா.வின் நெறியாள்கையுடன் கூடிய அனைத்துலக விசாரணை சுயாதீனமாக நடைபெறுதல் வேண்டும். உள்ளக விசாரணைகளில் சுத்தமாக நம்பிக்கையிழந்து அதிருப்தியடைந்துள்ள நிலையில், நீதி வழங்குவதை உறுதிப்படுத்தும் சர்வதேச வழிமுறைகளை ஐ.நா. கதவடைப்புச்செய்து வெறுப்பேற்றமாட்டாது எனும் குறைந்தபட்ச நம்பிக்கையுடனேயே தமிழ்மொழி பேசும் மக்கள் சீவித்திருக்கிறார்கள் என்பதை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு சுட்டிக்காட்டுகின்றோம். 

இயற்கை வளங்களில் முக்கியமானதும் உயிரினங்கள் வாழ்வதற்கு அத்தியாவசியமானதுமான நிலவளம், இந்த நிலவளம் இன்றேல், ஒரு உயிர்கூட வாழ முடியாது எனும் நிலைவரம் உள்ளபோது, ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களால் தமிழ்மொழி பேசும் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ஊசலாடிக்கொண்டிருக்கும் தமது இருப்பை தக்கவைப்பதற்காக தமிழ்மொழி பேசும் மக்கள் நித்தமும் உழன்றுகொண்டிருக்கின்றார்கள். இம்மக்களுக்கு 'தக்கன பிழைக்கும் வாழ்க்கையே' பெரும் போராட்டமாக மாறியிருக்கிறது.   

தாங்கள் பிறந்து வாழ்ந்து வளப்படுத்திய நிலத்தின் பாதுகாப்புக்கும்  அந்த நிலத்தில் உயிர்வாழ்வதற்கு தேவையான சீவனோபாய செயல்பாடுகளுக்கும் நீண்டகால தனிமனித விருத்திக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதமற்ற அச்சுறுத்தலான சூழலில், குறித்த விசாரணை அறிக்கையின் தீர்ப்பானது,

'இனப்படுகொலைக்கு பரிகார நீதி, அரசியல் தீர்வுக்கு பொதுஜன வாக்கெடுப்பு' என்றவாறு அமைய வேண்டும் என்று, மாபெரும் 'இன அழிப்புக்கு' உள்ளான மக்களின் ஒருமித்த குரலாக கோருகின்றோம். இவ்வாறு அமைய அனைத்துலக சமூகத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம் என்பதையும் நீதி எட்டப்படும் வரையில் இந்த அழுத்தம் தொடரும் என்பதையும் ஐ.நா சபையின் அங்கத்துவ நாடுகளுக்கும் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத்தலைவர்களுக்கும் இவர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் நினைவுபடுத்துகின்றோம். 

இராணுவ பாதுகாப்பின்மையும், அதனால் உண்டாகிய பீதியும் பொதுவான இராணுவ பாதுகாப்பு அவசியம்தேவை என்ற எண்ணமும்  கனடா அவுஸ்திரேலியா நாடுகளுக்கு சமஷ்டி ஆட்சிக்கு காரணமாக அமைந்தது போலவே, தமிழ்மொழி பேசும் ஈழத்தின் மக்களுக்கும் அவசியமும் தேவையும் எழுந்துள்ளது. 

ஆனால், சர்வதேச அரங்கில் ஸ்ரீலங்கா அரசானது, மற்றைய அரசுகளோடு செய்யும் ஒப்பந்தங்களால் தமிழ்மொழி பேசும் மக்களின் தனி அதிகாரம் பற்றிய சமஷ்டி ஆட்சி அந்தஸ்தை கட்டுப்படுத்த முயல்கிறது. இத்தகைய ஒப்பந்தங்களால் சிறீலங்கா அரசு தன்னைச்சட்டபூர்வமாக கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமே தவிர, மனித உரிமை பற்றிய உலகப்பிரகடனத்தை கட்டுப்படுத்த முடியாது.
அதேவேளை தனி அதிகாரம் பற்றிய சமஷ்டி ஆட்சி அந்தஸ்து குறித்த தமிழ்மொழி பேசும் மக்களின் பொது அபிப்பிராயத்தை

தெரிந்துகொள்ள வேண்டிய காரியபூர்வமான, தார்மீகமுறையிலான கடப்பாட்டிலிருந்து வழுவி, ஐக்கியநாடுகள் சபை தவறிழைக்க முடியாது.

இலங்கை, தமிழகம், புலம்பெயர் நாடுகளிலுள்ள பேராசிரியர்கள், சட்டவாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், அரசியல் - மனித உரிமை செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள் பலரை மதிஉரைஞர் குழுமமாகக்கொண்டு, வடக்கு கிழக்கில் செயல்பாட்டு வலையமைப்பைக்கொண்டுள்ள, பல்கலைக்கழக - உயர்கல்வி மாணவர்கள், சிவில் சமூக மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், முன்னாள் போராளிகள், சமூக ஆர்வலர்கள் உறுப்புரிமை பெறும் மாற்று அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய 'நாங்கள்' இயக்கத்தினர் வலியுறுத்துகின்றோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .