2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மீள்குடியேற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை

Gavitha   / 2015 மார்ச் 09 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இடம் பெயர்;ந்த நிலையில் உறவினர்களின் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வரும் தங்களை, தங்களின் சொந்த கிராமமான மாந்தை திருக்கேதீஸ்வரம் 'கோயில் பிட்டி' கிராமத்தில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாந்தை திருக்கேதீஸ்வரம் 'கோயில் பிட்டி' கிராம பகுதிக்கு திங்கட்கிழமை (09) வருகை தந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடமே, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிராம மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாந்தை திருக்கேதீஸ்வரம் 'கோயில் பிட்டி' கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100 குடும்பத்தைச் சேர்ந்தோர், நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றனர்.
இக்கிராம மக்கள் இந்தியா மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் அகதிகளாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2002ஆம் ஆண்டு மீண்டும் திருக்கேதீஸ்வரத்துக்கு மீள் குடியேற வந்துள்ளனர்.

எனினும் மாந்தை திருக்கேதீஸ்வரம் 'கோயில் பிட்டி' கிராமம் உட்பட அப்பகுதி இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டமையினால், அக்கிராம மக்களுக்கு தமது சொந்த இடங்களுக்கு மீளச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் உறவினர்களின் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் 2010ஆம் ஆண்டு மீண்டும் மாந்தை திருக்கேதீஸ்வரம் 'கோயில் பிட்டி' கிராம மக்கள் அவர்களது கிராமத்தில் உள்ள காணிகளை துப்பரவு செய்ய முயன்ற போது, அப்பகுதியில் இருந்த இராணுவம் எமக்கு துப்பரவு செய்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் 2013ஆம் ஆண்டு எமது காணிகளைச் சுற்றி தொல் பொருள் திணைக்களத்துக்கு உரிய இடம் என கல் நாட்டப்பட்டுள்ளதோடு பெயர்ப்பலகையும் நாட்டப்பட்டுள்ளது.

இதனால் இக்கிராம மக்களை குறித்த காணிகளுக்குள் செல்ல படையினர் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. காணிகளுக்குள் சென்றால் பள்ளம் தோண்டக்கூடாது, மரம் நடக்கூடாது, மதில் கட்டக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

இதனால் நாங்கள் எங்கே செல்வது என்று தெரியாத நிலையில் எமது காணிகளுக்குள் நாங்கள் செல்ல முற்பட்டோம். இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (9) யாழ்ப்பாணத்தில் இருந்து தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள் மாந்தை திருக்கேதீஸ்வரம் 'கோயில் பிட்டி' கிராம பகுதிக்கு வருகை தந்தனர்.

இதன் போது, திருக்கேதீஸ்வரம் மாந்தை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைமைக் காரியாலயத்துக்கு முன் ஒன்று திரண்டு, எமது காணி பிரச்சினைகள் குறித்து வருகை தந்த அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினோம்.

எமது காணிகள் தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இரு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அந்த மக்களிடம் உறுதியளித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .