2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் போராளிகள், உயிர்நீத்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குடும்பத்தினருக்கு உதவித்திட்டம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 11 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த்

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் புனர்வாழ்வு பெற்று குடும்பங்களுடன் இணைந்த போராளிகளுக்கும் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளின் குடும்பங்களுக்கும் அரசியல் காரணங்களுக்காக சிறைவாசம் அனுபவித்துவரும் கைதிகளின் குடும்பங்களுக்கும் வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சினால் உதவித் திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, விண்ணப்பங்கள் கோரப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் புனர்வாழ்வு பெற்ற போராளிகள், யுத்தத்தில் உயிர்நீத்த மற்றும் காணாமல் போனோரின் பெற்றோர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றது.

இதன்போது, தங்களின் இன்றைய நிலைமை தொடர்பாக அமைச்சருக்கு தெளிவுபடுத்திய அவர்கள், எந்த உதவிகளும் இன்றி தாங்கள் இருப்பதாகவும் இந்த உதவித்திட்ட முயற்சியை வரவேற்பதுடன் இதற்காக தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் அமைச்சரிடம் உறுதியளித்தனர்.

மேலும் இவ்விடயத்தில் எந்தவித அரசியல்வாதிகளையும் உள்வாங்காது தூய நோக்கோடு முன்னகர்த்திச் செல்லுமாறும் அவர்கள் இதன்போது கேட்டுக்கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், 'புனர்வாழ்வு பெற்ற போராளிகள், மரணமடைந்த போராளிகளின் குடும்பங்களையும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டே இந்த திட்டம் உருவாக்கப்பட்டது' என்றார்.

அத்துடன், இவ்விடயத்தில் அரசியல் கலப்படமின்றி செல்வதே எல்லோருக்கும் நன்மை பயக்குமென்றும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த சவால்கள் வந்தாலும் அதற்கு முகம் கொடுக்கத் தயார் எனவும் டெனிஸ்வரன் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .