2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தமிழர் பிரச்சினை தீர்வுக்கு மோடியின் விஜயத்தை விவேகமாக பயன்படுத்தவும்; த.தே.கூ.விடம் கோரிக்கை

Menaka Mookandi   / 2015 மார்ச் 11 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தமிழ் மக்களின் நீண்டகாலத் துயரத்துக்கு விடிவு ஏற்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை விவேகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வி.எஸ்.சிவகரன் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகுக்கு அஹிம்சையைப் போதித்த நாடு, எம்மை ஆயுதம் ஏந்த வைத்தது முதல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை  வரைக்கும் இந்தியாவின் வகிபாகம் நேரடியாவும் மறைமுக ஆசீர்வாதமாகவும் காணப்பட்டது என்பதை இலங்கை அரசே பலமுறை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளதை தாங்களும் அறிவீர்கள்.

13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள மாகாணசபை முறைமை பற்றி கஞ்சித்தும் வாய்திறக்காதீர்கள். அது எமது அறுபது ஆண்டுகால இன விடுதலைப் போராட்டத்தின் அளப்பெரிய தியாகத்தை கொச்சப்படுத்துவதாகவே அமையும். அத்துடன், இன விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் ஆத்மா உங்களை மன்னிக்காது.

வடக்கு - கிழக்கின் நிரந்தர இணைவுக்கு வலியுறுத்துங்கள். நின்று நிலைக்கக்கூடிய சுய ஆட்சித் தத்துவத்தின் அடிப்படையிலான பூரண சமஷ்டி முறைமையுள்ள அதிகார பரவலாக்கலே எமக்கு மட்டுமின்றி இலங்கை முழுவதுக்கும் பொருத்தமானதாகும். நடைமுறையில் உள்ள ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு எந்தவித அதிராகப் பகிர்வும் பெற முடியாது என்பதை இடித்துரைத்துக் கூறுங்கள்.

நாங்கள் நியதிகளுக்கு உட்பட்ட நீதி கேட்டு போராடுகிறோமே தவிர, நிவாரணம் கேட்கவில்லை என்பதையும் வலியுறுத்துங்கள்.  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் காணாமல் போனவர்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய தார்மீகம் இந்தியாவுக்கும் உண்டு என்பதை தெளிவுபடுத்துங்கள்.

ஏனெனில், தமிழின அழிப்பின் பங்காளிகள் அவர்களும் என்பதை மறுக்க முடியாது. உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதை கடந்தகாலத்தின் பல விசாரணை ஆணைக்குழுக்களையும் சம்பவங்களையும் அதன் முடிவுகளின் நீதியின்மையையும் வெளிப்படுத்துங்கள்.

குற்றவாளியே நீதிபதியானால் கங்காரு நீதிமன்றமாகவே அது காணப்படும். உதாரணமாக கிருசாந்தி குமாரசாமி வழக்கு விசாரணை, மூதூர் அக்ஷன் போம் தொண்டு நிறுவனப் படுகொலை விசாரணை, திருமலை மாணவர் படுகொலை விசாரணை, கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை, நிவாரணம் கேட்கும் காணாமல் போனோர் ஆணைக்குழு ஆகியன எல்லாம் நீதியை நீர்த்துப்போக வைத்து அவநம்பிக்கைக்கு அடி கோலியவையே இன்றும் பல உண்டு தாங்களும் அறிந்ததே.

ஆகவே, பெரும்பான்மை சிறுபான்மையை மன்னிப்பதே நல்லிணக்கம். இதுதான் தொன்னாபிரிக்காவிலும் நடந்தது. இது இலங்கையில் சாத்தியமா? சர்வதேச விசாரணையின் அவசியத்தை ஆதாரபூர்வமாக வழங்கி விளக்குங்கள். முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது குற்ற மனத்துடனான இன அழிப்பு என்பதையும் புரிய வையுங்கள். தமிழ் மக்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. வேதனையின் அச்சத்தின் உச்சத்தில் நின்று தெருவோர வேலி ஓணான் போல்; கனத்த இதய வலியுடன்; கண்ணீரோடு கதறி அழுகின்றனர். ஆறாண்டு ஆகியும் அழுகுரல்கள் ஓயவில்லை.

பிரபாகரனால் கூட்டிணைக்கப்பட்டவர்கள் என்பதாலேயே தங்களின் தலைமைத்துவமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலட்சியமற்ற கோஷங்களையும் பொருட்படுத்தாமல் தொடரும் பேராதரவு அவர்களினாலேயே உருவானது என்பதை தாங்கள் உட்பட எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

'பாலைப் பார்க்காவிட்டாலும் பால் வார்த்த பானையைப் பார்க்க வேண்டும்' எனும் கிராமத்து பழமொழியையே தமிழ் மக்கள் பின்பற்றுகின்றனர். முதிர்ந்த வயதும் நிறைந்த அனுபவமும் தெளிந்த அறிவும் தீர்க்கதரிசனப் பார்வையும் கொண்ட தாங்கள், பல சந்தர்ப்பங்களில் மதிநுட்பம் சார்ந்து தந்திரோபாய ரீதியாக தமிழ் மக்களின் விமோசனத்துக்கு வித்திடவில்லை எனும் குற்றச்சாட்டும் தங்கள் மீது உண்டு என்பதையும் தாங்கள் மீள்பார்வை செய்ய வேண்டும். நல்லிணக்கம் எனும் சொல்லாடலுக்காய் ஏகாதிபத்தியவாதிகளின் சூது, மதி சூழ்ச்சிக்குள் சிக்குண்டுவிட்டிர்களே எனும் ஐயமும் தமிழின உணர்வாரள்களுக்கு உண்டு.

தாங்கள் காட்டிய நல்லிணக்கத்தின் ஊடாக அறுபது நாட்கள் கடந்து விட்ட நிலையில் தமிழ் மக்களுக்கு கிடைத்த விமோசனம் என்ன? ஆளுநரையும், பிரதம செயலாளரையும் மாற்றுவதா எமது ஆறு தசாப்த போராட்டம்?. ஆட்சி மாறும் போது நிர்வாகம் மாறுவது வழமையே. இதுவரை கைதிகள் விடுதலை, அபகரிக்கப்பட்ட நிலத்தை மீளப்பெறல், இராணுவ வெளியேற்றம், காணாமல் போனோர் நிலைப்பாடு, இனப்பிரச்சினைத் தீர்வு என இவற்றில் ஏதாவது ஒன்று முன்னெடுக்கப்பட்டதா?. கிழக்கு மாகாண சபை முதல்வர் விடயத்தில் தங்கள் கோரிக்கை என்னவாகியது என்பதை யாவரும் அறிவார்கள்.

சிங்கள தேசம் இராஜதந்திர ரீதியில் தொடந்து வெற்றி பெறுகிறதை மறுக்க முடியாது. அதில் ஒன்றே ஐ.நா விசாரணையும். இது தொடர்ந்து பிந்போடப்பட்டு காணாமல் போகும்நிலை தோன்றலாம்.
சிங்களத் தலைவர்கள் ஒரு போதும் நியாயமாக செயற்பட மாட்டார்கள் என்பதை தாங்கள் இதுவரை புரியவில்லையா என்பது  வேதனை அளிக்கிறது. டி.எஸ்.சேனாநாயக்கா தொடக்கம் இன்றைய சிறிசேனா வரை நாளைக்கு அப்புஹாமி என்று ஒருவர் வந்தாலும் ஒரே மாதிரித்தான் இருப்பார்கள்' என்பது கடந்த கால அனுபவம்.

எனவே, நிபந்தனையற்ற ஆதரவு தமிழ்த் தேசியத்தை துண்டாடும் என்பதை அன்றே நான் எச்சரித்திருந்தேன். இதில் அமைதியாக அழிப்பதில் ராஜபக்ஷவை விஞ்சியவர் ரணில் விக்கிரமசிங்க இதை தாங்கள் அறியாதவரும் அல்ல. எனவே, தமிழ் மக்களின் எதிர்கால இருப்பின் நிச்சியத்தன்மையை விரைவாக அறுதியிட்டு உறுதியாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு தங்கள் மீதே தற்போது சுமத்தப்பட்டுள்ளது என்பதை தாங்கள் தெளிவுற உணர வேண்டும். ஆகவே இந்தியப் பிரதமரின் சந்திப்பு வழமையான இராஜதந்திரிகள் சந்திப்பின் பின்னர் கூறுகின்ற மகுடவாசகங்களுடன் நிறைவுறக் கூடாது என்பதை தமிழ் மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பு ஆகும்.

கால வரையறைக்குள் நிகழ்ச்சி நிரல் இடப்பட்டு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வழிவகுக்கா விட்டால் தமிழ்த் தேசியம் வலிமையிழந்து போகும் அபாய நிலைதோன்றத் தொடங்கி விட்டதாகவே உணரப்படுகிறது.

எனவே, இவ்விடயங்களை கடந்த ஆறு ஆண்டுகளாக கட்சியின் மத்திய குழுவிலும் பகிரங்கமாகவும் வலியுறுத்தி வந்துள்ளேன் என்பதை தாங்கள் மறுக்க முடியாது. எனவே, மோடியின் சந்திப்பை ஆக்க பூர்வமாக ஏற்படுத்திக்கொள்வீர்கள் என நம்புவதுடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இதய சுத்தியுடன் செயலாற்றி நிறைவுறுத்துவீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .