Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 15 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்த்
இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வன்னி மாவட்ட சாலைகளுக்கு புதிய பஸ் வண்டிகள் கையளிக்கும் நிகழ்வு, மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தில் நேற்று (14) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதன்போது, புதிய 15 பஸ்கள் கையளிக்கப்பட்டதுடன், அவற்றில் மன்னார் சாலைக்கு 5 பஸ்களும் வவுனியா சாலைக்கு 8 பஸ்களும் முல்லைத்தீவு சாலைக்கு 2 பஸ்களும் என பகிர்ந்தளிக்கப்பட்டன.
வடமாகாண அரச போக்குவரத்துச் சேவையின் பொது முகாமையாளர் முஹமட் அஸ்ஹர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி போக்குவரத்து அமைச்சர் எம்.எஸ்.முஹமட் தௌபீக், கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியூதீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், முத்தலிப் பாபா பாரூக், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உரையாற்றிய வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் கூறியதாவது,
'தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் இந்த அரசு உரிய கவனமெடுத்து தீர்த்து வைக்குமாயின் எமது நாடு துரித கதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக அபிவிருத்தி அடையும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. 'மத்திய அரசினால் வடக்கு மாகாண மக்களின் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த பஸ்கள் (நேற்று) இன்று கையளிக்கப்பட்டன. மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்படும் இந்த புதிய பஸ்களின் மூலம் போக்குவரத்து சேவை நடைபெறாத பிரதேசங்களுக்கு புதிய சேவைகளை ஆரம்பிக்க முடியும். இதன் மூலமும் கிராமப்புறங்களுக்கான சேவைகளை அதிகரிக்கலாம். இதனால், பயணிகள் எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்சினையை கணிசமாக குறைக்க முடியும்.
இன்று வட மாகாணத்தில் போக்குவரத்து தொடர்பாக இலங்கை போக்குவரத்து சாலைக்கும் தனியார் பஸ் சங்கங்களுக்கும் இடையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறிப்பாக போக்குவரத்து அட்டவணை தயாரிப்பதில் இருந்து வீதிகளில் பிரயாணிகளை ஏற்றி இறக்குவது வரை போட்டி நிலையே காணப்படுகின்றது.
பயணிகளை பஸ்ஸில் வைத்துக்கொண்டு போட்டி போட்டு ஓடுவது, இவ்வாறு வேகமாக ஓடும்போது இடையில் நிற்கும் பயணிகளை ஏற்றாமல் விட்டுச்செல்வது மற்றும் குறித்த தரிப்பிடங்களில் இறங்க வேண்டிய பயணிகளை இறக்காது வேறு இடத்தில் இறக்குவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இவ்வாறான செயல்களினால் வயோதிபர்கள், நோயாளிகள், குழந்தைகளுடன் பயணிக்;கும் தாய்மார் போன்றோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன் சில சமயம் பாதிப்புக்களையும் எதிர்கொள்கின்றனர். எனவே இவ்வாறான செயல்கள் தொடரும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கையினை மேற்கொண்டு தண்டனைக்கு உட்படுத்துவதனூடாகவே இவற்றை கட்டுப்படுத்த முடியும்' என்றார்.
மேலும், அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது எமது பிரதேசத்தின் அபிவிருத்தியையும் கவனத்திற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இறுதியாக எமது தமிழ் மக்களின் உரிமைகளை இந்த அரசு உரிய கவனமெடுத்து தீர்;த்து வைக்குமாயின் எமது நாடு துரித கதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக அபிவிருத்தி அடையும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதன் ஊடாக எமது நாட்டை கட்டியெழுப்புவோம்' என டெனிஸ்வரன் மேலும் கூறினார்.
அங்கு உரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறியதாவது,
'நாங்கள் அனைவரும் இன்று இந்த மேடையில் ஒன்றாக இருக்கின்றோம் என்றால் அதற்கு காரணம் இந்த ஆட்சி மற்றத்தின் ஒரு பிரதிபலிப்பு என்பதாக நாம் கருதுகின்றோம். கடந்த வருடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்கும் அழைக்கப்படுவதில்லை. அந்த வகையில் தற்போதைய ஆட்சி மாற்றம் இன்று எம் எல்லோரையும் ஒன்றாக இங்கு அமர வைத்திருக்கின்றது என்பதனை நினைத்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
மன்னார் மாவட்டத்தைப் பொருத்தவரையில் இரண்டு விடயங்கள் இன்றைக்கு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இருக்கின்றது. இந்திய பிரதமர் தலைமன்னார் பகுதிக்கு வந்து புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்துள்ளதோடு தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்துள்ளார். குறித்த நடவடிக்கைகள் வரலாற்று சிறப்புமிக்கதாக காணப்படுகின்றது.
அதேபோல், போரால் பாதிக்கப்பட்ட எமது வன்னி மாவட்டத்துக்கு இந்த புதிய அரசாங்கம் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ், புதிய பஸ் வண்டிகளை வழங்கி வைத்துள்ளமையை இரண்டாவது நிகழ்வாக பார்க்க முடிகின்றது. எனவே, நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பஸ் கொடுப்பதன் ஊடாக மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை. பல பிரதேசங்களில் வீதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. எனவே, போக்குவரத்து அமைச்சரின் ஊடாக குறித்த வீதிகளை புனரமைக்க நடவடிக்கைகள் மோற்கொள்ள வேண்டும். வீதிகள் புனரமைக்கப்படுவதன் காரணத்தினால் புதிய பஸ் வண்டிகளை எவ்வித பிரச்சினைகளும் இன்றி சேவையில்; ஈடுபடுத்த முடியும்.
அதுமட்டுமின்றி, அரச போக்குவரத்துச் சேவையும் தனியார் போக்குவரத்துச் சேவையும் இணைந்து செயற்படக்கூடிய ஒரு வழிமுறையை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். குறித்த போக்குவரத்துச் சேவைகளை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதாக இருந்தால், முதலில் வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும். அதைவிட, எமது வன்னி மாவட்டம் பின் தங்கிய மாவட்டம் என்பதாலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முதல் முறையாக வன்னியில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
வெளிநாட்டு அமைச்சர்கள், தூதுவர்கள் இலங்கைக்கு வந்தவுடன் யாழ்ப்பாணத்துக்கே செல்கின்றனர். ஆனால், இந்திய பிரதமர் இங்கு வருகை தந்தமைக்காக பிரதமருக்கும் இந்திய அரசுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
3 hours ago