2025 ஜூலை 12, சனிக்கிழமை

மனித புதைகுழியிருந்த இடத்திலுள்ள கிணற்றை தோண்ட அனுமதி

Thipaan   / 2015 மார்ச் 16 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், மாந்தை, திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டப்பட்ட இடத்தில் காணப்பட்டதாக கூறப்படும் கிணற்றை தோண்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் நீதிமன்றம் நேற்று  திங்கட்கிழமை (16) அனுமதி வழங்கியுள்ளது.

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை (16), மன்னார் நீதிமன்ற நீதவான் அலெக்ஸ் ராஜா முன்னிலையில் இடம்பெற்ற போதே நீதவான் இந்த அனுமதியை வழங்கினார்.

குறித்த மனிதப் புதைகுழி இருந்த இடத்தில் கிணறொன்று காணப்படுவதாகவும் அதனை தோண்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரி காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக மன்றில் ஏற்கெனவே வழக்கு தால்கள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த கிணற்றை பார்வையிட காணாமல் போனவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் மன்னார் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியிருந்த போதும் குறித்த பகுதியில் மழை நீர் தேங்கி நின்றமையினால் கிணற்றை பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, அப்பகுதியில் காணப்பட்ட கிணற்றை தோண்ட வேண்டும் என காணாமல் போனவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்தனர். இந்த வழக்கு தொடர்பில் நேற்று விசாரணை நடத்திய போது, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையிலான 5 தினங்களுக்குள் அந்த கிணற்றைத் தோண்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதவான் அனுமதி வழங்கினார்.

காணாமல் போனவர்கள் சார்பாக கொழும்பில் இருந்து வருகை தந்த சட்டத்தரணிகளான வி.புவிதரன்,வி.எஸ்.நிரஞ்சன்,கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரட்னவேல் மற்றும் மன்னார் சட்டத்தரணிகளான எம்.சபூர்தீன், பிரிமூஸ் சிறாய்வா, லோகு,எஸ்.வினோதன் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .