Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 19 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
புதுக்குடியிருப்பில் மக்களுக்கு சொந்தமான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளபோதும் மீண்டும் இராணுவத்தினருக்காக அவற்றைச் சுவீகரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சி நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் புதன்கிழமை (18) தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
'புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் 682ஆவது படையணியினர் கையகப்படுத்தியிருந்த காணிகளை அவர்களுக்கே நிரந்தரமாக கையளிப்பதற்கு கிளிநொச்சி மாவட்டச்செயலக காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் எம்.எம்.திலகரட்ண ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
இக்காணிகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிக்காணிகளாகும். இறுதி யுத்தத்துக்குப்பின்னர் இவற்றுக்கு உரித்துடைய மக்களை மீளக்குடியேறவிடாது,
இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருந்தனர். அத்துடன் அவற்றை நிரந்தரமாக சுவீகரப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தமையை அடுத்து, காணிகளுக்கு உரித்துடைய மக்கள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் காணிகளை சுவீகரிப்பது சட்டத்துக்கு முரணானதும், நீதித்துறையை அவமதிப்பதுமான செயலாகும். மக்களுக்கு உரித்துடைய காணிகளை ஆக்கிரமிப்பு செய்தமை அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போகச்செய்யப்பட்டோரை கண்டறிதல் போன்ற பல்வேறு தேவைப்பாடுகளுடன் பொதுமக்கள் காணப்படுகின்றார்கள். அவ்வாறான நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிப்பதும் மக்களின் பிரதான பிரச்சினைகளில் மிகமுக்கியமானதாக உள்ளது.
இவ்வாறான நிலையில் அத்தேவைகளுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வொன்று எட்டப்படும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி அதன் பங்களார்களாக தமிழ் மக்கள் இருக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் அதிகாரபூர்வமாக வழங்கிய காணி உறுதிகளை இந்நாள் ஜனாதிபதி இரத்து செய்து காணிகளை அபகரிப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. இவ்விடத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், நீதிமன்றமும் அவமதிக்கப்படுகின்றனர். மாற்றத்துக்காக வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் பொய்த்துப்போய்விடக்கூடாது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய ஜனாதிபதியுடன் நடைபெற்ற முதலாவது சந்திப்பில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது மக்களின் காணிகளை நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் அவசரமாக கையளித்து துரிதகதியில் மீள்குடியேற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்படல்வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் அனைத்தும் எமது மக்கள் வாழ்ந்து வளப்படுத்திய காணிகளாகும். அங்குள்ள வீடுகள் பயன்தரு மரங்கள் உள்ளிட்ட வளங்கள் மிகப்பெறுதிமிக்கவையாகும். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு கிழக்கில் பொதுத்தேவைக்கென்ற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எம்மக்களுக்கு உரித்துடைய காணிகளை, அவற்றுக்கு உரித்துடையவர்களிடத்தில் மீளவும் கையளித்து இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதானது நல்லாட்சிக்கான உதாரணமாகும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
3 hours ago