2025 ஜூலை 12, சனிக்கிழமை

விபூசிகாவை தாயுடன் இணைக்க நீதிமன்றம் மறுப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 20 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் இருக்கும் பாலேந்திரன் விபூசிகாவை அங்கிருந்து விடுவித்து அவரது தாயார் ஜெயக்குமாரியுடன் இணைப்பதற்கு கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், வெள்ளிக்கிழமை (20) அனுமதி மறுத்தார்.

தனது மகளை சிறுவர் இல்லத்திலிருந்து விடுவித்து தன்னுடன் இணைக்குமாறு சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் ஜெயக்குமாரி மனுக்கொடுத்திருந்தார். இன்று காலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனு, பிற்போடப்பட்டு பிற்பகலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜெயக்குமாரி சார்பாக சட்டத்தரணிகளான எஸ்.விஜயராணி, ம.கிறேசியன், என்.சுந்தர சர்மா, எச்.றைகான், எஸ்.துஸ்ஸியந்தி ஆகியோர் மன்றில் ஆஜராகினர். விபூசிகாவை சிறுவர் இல்லத்திலிருந்து விடுவித்து தாயாருடன் இணைக்குமாறு சட்டத்தரணிகள் கூறினர்.

ஜெயக்குமாரி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் மீதும் இவர் மகள் மீதும் பயங்கரவாத குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தாயார் தடுத்து வைக்கப்பட்டு, சிறுமி சிறுவர் இல்லத்திலும் வைக்கப்பட்டுள்ளார்.

இருவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திலிருந்து விடுதலையாகவில்லை. அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸாரிடமிருந்து கடிதம் கிடைக்கப்பெற்றால் மாத்திரமே தாயாருடன் சிறுமியை சேர்;க்க முடியும். அதுவரையில் சிறுமியை சிறுவர் இல்லத்தில் இருந்து விடுவிக்க முடியாது என்று நீதவான்கூறினார்.

பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் கோபி என்று அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவருக்கு புகலிடம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி ஒரு வருடத்துக்கு பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை (10) பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .