2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பிரச்சினைகளை ஆராயும் விசேட கூட்டம்

Kogilavani   / 2015 மார்ச் 27 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் வீட்டுத்திட்டம் வழங்கப்படாத காரணத்தால்; பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாட்டுக்கு அமைவாக அவர்களின் பிரச்சினைகளை ஆராயும் விசேட கூட்டம் வியாழக்கிழமை(26) மன்னார் அரச அதிபர் எம்.வை.எஸ்.தேசபிரிய தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

'மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பாதிக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்த போதிலும் பேசாலை பகுதியிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 7,500 இந்தியன் வீடுகள் வழங்கப்பட்டிருந்தன.

இதன் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் சுமார் 242 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நிறைவுபெறாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

242 பயனாளிகளுக்கும் வீட்டுகளை நிர்மாணிப்பதற்கு ஐம்பது ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரையான பணம் வழங்கப்பட்டிருந்த போதிலும் கட்டுமான பணிகள் எதுவும் இடம்பெறவில்லை.

இதனையடுத்து குறித்த வீடுகளுக்கான கட்டுமான பணிகளுக்காக வழங்கப்படவிருந்த நிதி நிறுத்தப்பட்டு இதனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முடியுமா? என்பது பற்றி இந்திய தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடி அது ஏற்கபடின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டத்தை வழங்க முடியும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் ஏனைய பாதிக்கப்பட்டவர்கள் எதிர்வரும் காலங்களில் கிடைக்கபெறும் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுத்திட்டம் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்த அரச அதிபர் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இதன்போது மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டி மெல், முசலி, நானாட்டான், மடு, மன்னார் ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், இந்தியன் வீட்டுத் திட்டத்துக்கு பொறுப்பான அதிகாரிகள், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் இந்தியன் வீட்டுத் திட்டததுக்கு பொறுப்பான அதிகாரிகள், அரச,அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .