2025 ஜூலை 12, சனிக்கிழமை

அபிவிருத்தியில் பெரியமடு கிராமம் புறக்கணிப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஷ்ணா

அபிவிருத்தி திட்டங்களில் பெரியமடு கிராமம்; புறக்கணிக்கப்படுவதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் நேற்று திங்கட்கிழமை (27) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மன்னார் மாவட்டத்தில் மாந்தை பிரதேச செயலக எல்லைப் பிரிவுக்குள் பெரியமடு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வாழ்கின்றனர்.

1956இல் விவசாயக் குடியிறுப்புகளை நிறுவுகின்ற இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ், சுமார் 280 குடும்பங்கள் மன்னார், விடத்தல்தீவு பகுதியிலிருந்து குறித்த பிரதேசத்தில் குடியேற்றப்பட்டார்கள்.

1990களில் ஏற்பட்ட பலவந்த வெளியேற்றத்தை தொடர்ந்து இக்கிராமம் பெரியளவில் புறக்கணிக்கப்பட்டிருப்பதை மேற்படி கிராமத்தைச்; சேர்ந்த கிராமிய அபிவிருத்தி சங்கங்களைச் சந்தித்தபோது தெரிந்துகொண்டேன்.   

பெரியமடு குளம், சன்னார் குளம் ஆகிய இரண்டு குளங்களையும் அண்மித்து இராணுவ முகாம்கள் அமைக்கபட்டுள்ளதால் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குவதாக அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

அத்துடன் பெரியமடுவில் இருந்து மன்னாருக்கும் மடுவுக்கும் அல்லது காங்கையன்குளம் ஊடாக வவுனியாவுக்குமான பாதைகள் புனரமைக்கப்படாததால்; எல்லா வகையிலும் இக்கிராமம் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

பாடசாலையில் கட்டடங்கள் அமைக்கப்பட்டாலும் மீளக்குடியேற்றத்தில் குறைபாடுகள் தொடர்ந்தும் நிலவுவதால் சீரான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளது.

நிவாரண உதவிகளின்போதும் அரசியல் பேதங்கள் பார்க்கப்படுவதாகவும் இதனால் பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் எதிர்நோக்குவதாகவும் கிராமிய அபிவிருத்தி சங்கப பிரதிநிதிகள் என்னிடம் முறையிட்டனர்.

மேற்படி விடயங்கள் குறித்து உரிய கவனம் எடுக்கப்படும். அத்தோடு காணி தொடர்பான பல பிரச்சினைகளும் காணப்படுகின்றன. இவற்றையும் மாகாண அதிகாரங்களுக்கு உட்பட்டவகையில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

முதல்கட்டமாக மாந்தை மேற்கு பிரதேச செயலக மட்டத்தில் மீள்குடியேறுகின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்கும் மீள்குடியேற்றத்தை திட்டமிடுவதற்குமான விசேட அமர்வொனறை நடத்துவது சிறப்பானதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

அத்தோடு பெரியமடு மக்கள் தொடர்பிலான கவனயீர்ப்பு பிரேரணையொன்றை எதிவரும் மாகாணசபை அமர்வில் கொண்டுவருவதற்கும் குறித்த விடயங்களோடு தொடர்புடைய அதிகாரிகளின் கவனத்துக்கு இம்மக்களின் பிரச்சினைகளை முன்கொண்டு சொல்வதற்கும் தீர்மானித்திருக்;கின்றேன்' என குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .