2025 ஜூலை 03, வியாழக்கிழமை

முள்ளிவாய்க்காலில் அத்துமீறிய தென்னிலங்கை மீனவர்கள், ரவிகரனின் தலையீட்டால் வெளியேற்றம்

Thipaan   / 2015 மே 30 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த தென்னிலங்கை மீனவர்கள், தமது நடவடிக்கைகளை முள்ளிவாய்க்காலிலும் தொடக்கிய நிலையில் தனது தலையீட்டினால், அவர்கள் வெளியேறியுள்ளனர் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வெள்ளிக்கிழமை (29) தெரிவித்துள்ளார்.

'கரைவலைத் தொழிலுக்குரிய அனுமதியைப் பெற்று முள்ளிவாய்க்காலுக்கு வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர், சட்டவிரோதமாக படகுகள் தெப்பங்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டனர்.'

'இந்த தொழில் நடவடிக்கையால் அதிருப்தியுற்ற முள்ளிவாய்க்கால் பகுதி தமிழ் மீனவர்களின் நெய்தல் முள்ளி வாய்க்கால் கிழக்கு கடல் தொழில் சங்கத்தினர், இதைத் தடுத்து நிறுத்த எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.' என கூறினார். 

'முள்ளிவாய்க்கால் கப்பலடிப்பகுதியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரின் பிரசன்னத்தால் சாதகமான சூழலுடன் தென்னிலங்கை மீனவர்கள், தமிழ் மீனவர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் தொடர்ச்சியாக தமது சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதையடுத்து நெய்தல் முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்றொழில் சங்கத்தினர், என்னை தொடர்பு கொண்டு மேற்படி நிலை தொடர்பில் முறையிட்டனர்.'
 
'உடனே முள்ளிவாய்க்கால் கப்பலடிக்கு சென்று சம்பவ இடத்தில் சட்டவிரோதமான முறையில் தென்னிலங்கை மீனவர்கள் கடற்றொழில் நடவடிக்கையை மேற்கொண்டதை நேரில் உறுதிப்படுத்தினேன்.' என தெரிவித்தார்.

'மேலும் அங்கே நின்ற தென்னிலங்கை மீனவர்களிடம் இது ஒரு சட்டவிரோத நடவடிக்கை எனவும், இங்கு இப்படிச் செய்வதை அனுமதிக்கமுடியாது எனவும் மேற்படி நடவடிக்கைகள் தொடர்ந்தால் கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டி வரும் எனவும் தெரிவித்தேன்.'

'அங்கிருந்தபடியே கடற்றொழில் நீரியல் வள உதவிப்பணிப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த அத்து மீறல் நடவடிக்கை பற்றி அறிவித்தேன்.

இதையடுத்து மேற்படி தென்னிலங்கை மீனவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.' என ரவிகரன் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .