2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கிராமிய வங்கிகள்இலகுவான சேவையை வழங்கவேண்டும்: எம்.பி.சந்திரகுமார்

George   / 2015 ஜூன் 01 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிராம மக்கள் இலகுவாக சேவைகளை பெறும் வகையில் கிராமிய வங்கிகள் பணியாற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தால் நவீன மயப்படுத்தப்பட்டு மீளமைக்கப்பட்ட கிராமிய வங்கியை ஞாயிற்றுக்கிழமை (31) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், கடந்த யுத்த காலத்தில் நெருக்கடிகளில் வாழ்ந்த மக்களுக்கு கூட்டுறவுத்துறை மிகுந்த அர்ப்பணிப்புடன்  சேவையாற்றியுள்ளது. சுமார் 25 வருடங்களாக மக்களுக்கான உலர் உணவு விநியோகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் சிறப்பாக சேவையாற்றி வந்தன.

அந்தக் காலப்பகுதியில்  கூட்டுறவுச் சங்கங்களை வளர்த்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களும் அதிகமாகவே காணப்பட்டன. ஆயினும், இறுதிக்கட்ட யுத்தப் பாதிப்புக்களால் வன்னிப் பெருநிலப்பரப்பில் இயங்கி வந்த அனைத்து கூட்டுறவுச் சங்கங்களும் தமது சொத்துக்களை முற்றாக இழந்துவிட்டன.  பல சங்கங்கள் தமது பணியாளர்களையும் இழந்துள்ளன. இதனால், மீள்குடியேறிய காலத்தில் கூட்டுறவு அமைப்புகள் இயங்க முடியாத நிலை காணப்பட்டது.

அரசாங்கமும் பல்வேறு தொண்டர் அமைப்புகளும் கூட்டுறவுத்துறையை மீளவும் வளப்படுத்துவதற்காக பல்வேறு உதவிகளை வழங்கின. இருப்பினும், கூட்டுறவுத்துறைகளை நிர்வகிப்பதற்கு ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட இயக்குநர் சபைகளுக்கு மாறாக, அரச உத்தியோகத்தர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களை கொண்டு இயக்குகின்ற நிலை காணப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல கூட்டுறவுச் சங்கங்களில் அழுத்தங்களின் அடிப்படையில் திணிக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டும் இயங்கவேண்டிய நிலை காணப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் நாம் அனைத்து கூட்டுறவு அமைப்புகளும் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட தலைமைத்துவத்துக்கு கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராடி வந்தோம்.

முதலில் பளை பிரதேசத்திலும் தொடர்ந்து மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் இயங்கிவரும் கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட தலைமையைக் கொண்ட இயக்குனர் சபையின் கீழ் இயங்குவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதனால், செயற்றிறன் மிக்க தலைமைத்துவத்தைக் கொண்ட பல கூட்டுறவு அமைப்புகள் துரிதமான வளர்ச்சி போக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றன.

இன்று கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்ந்தும் முன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டுமாயின், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றன. இன்று உருவாகி வரும் போட்டிச் சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில், செயல் வீச்சுடன் இயங்கக்கூடிய வகையில் கூட்டுறவுச் சங்கங்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். இலாப நோக்கங்களை மட்டும் மையமாகக்கொண்டு செயற்படுவதைத் தவிர்த்து, சேவை நோக்கையும் தன்னகத்தே கொண்டவையாக கூட்டுறவுத்துறை இயங்கவேண்டும்.

கிராம மக்களின் மேம்பாட்டை இலக்காகக்கொண்டு இயங்கும் கிராமிய வங்கிகள்  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக காத்திருக்கும் மக்களுக்கு தமது சேவையை இலகுவான முறையில் வழங்க முன்வர வேண்டும்.

இன்று எத்தனை வங்கிகள் இயங்கி வந்தாலும், அவற்றில் சாதாரண மக்கள் தமது கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். தமது வாழ்வாதாரத்துக்கான தொழில்வாய்ப்பை விருத்தி செய்வதற்காக வங்கிக் கடனைப்பெற முயற்சிக்கும் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களை பிணைக்கு ஒப்பமிட அழைத்து செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்த நடைமுறையை பின்பற்ற முடியாத பலர் வங்கிக் கடனை பெறும் முயற்சிகளைக் கைவிட்டு வேறு வழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்ற நிலைமையையும் காணமுடிகின்றது. கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை இலக்காகக்கொண்டு இயங்கும்  இவ்வாறான கிராமிய வங்கிகள் மக்களுக்கு இலகுவாக சேவையாற்றக்கூடிய வகையில் செயலாற்ற வேண்டியது அவசியமானது என்றார்.

கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் நவீனமுறையில் கணணி மயப்படுத்தப்பட்டு மீளமைக்கப்பட்ட கிராமிய வங்கியே திறந்து வைக்கப்பட்டமை  குறிபிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .