2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அக்கராயன்குள பாலப்பகுதி அபாயப் பகுதியாக அடையாளம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 01 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன்குளத்தின் கீழான பாலப்பகுதி கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள இடர் அபாயம் மிகுந்த பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இடர் முகாமைத்துவக் கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருமுறிகண்டியிலிருந்து வன்னேரிக்குளம் செல்லும் வீதியில் அக்கராயன்குளத்தின் வான்வெள்ளம் வீதியின் குறுக்காக பாய்கின்ற பகுதியில் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தினால் அக்கராயன் குளத்தின் 100 மீற்றர் வரையான அகலத்தில் வெளியேறுகின்ற வான்வெள்ளம் வீதியிலுள்ள 20 மீற்றர் வரையான குறுகிய தாழ்வான பாலத்தினூடாக வெளியேறமுடியாத நிலையில் வீதியின் 250 மீற்றர் வரை பரவிப் பாய்வது வழமை.

இதன் காரணமாக வீதியின் போக்குவரத்து மூன்று நாட்களுக்கு மேல் தடைப்படுவதுடன், அக்கராயன் கிழக்கு மக்கள் அக்கராயன் மத்தியிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையும் அக்கராயன் மருத்துவமனையின் நோயாளர் வண்டி கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு நோயாளர்களை கொண்டு செல்ல முடியாத நிலையும் ஆண்டுதோறும் நிகழும் வெள்ள இடராக பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

அக்கராயன் குளத்தின் வான்வெள்ளம் வீதிக்கு குறுக்காக பாயுமிடத்தில் மேம்பாலம் அமைத்துத்தருமாறு அக்கராயன் கிழக்கு, அக்கராயன்மத்தி, கெங்காதரன் குடியிருப்பு, அக்கராயன்மேற்கு ஆகிய கிராமங்களின் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் அதிகாரிகளிடம் மனுக்கள் மூலமும் வாய்வழி மூலமும் கோரிக்கை விடுத்தும் குறித்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் வான்வெள்ளம் பாய்கின்ற பகுதி வெள்ள இடர் மிகுந்த பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கராயன் பிரதேசத்திலுள்ள 4,000 குடும்பங்களின் முக்கிய போக்குவரத்து வீதியில் மழைகாலத்தில் போக்குவரத்து தடைபடுவதன் காரணமாக பெரும் வெள்ள இடரினை ஆண்டுதோறும் இப்பகுதி மக்கள் எதிர்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X