2025 ஜூலை 12, சனிக்கிழமை

குடிநீருக்காகக் கூட்டிணைந்தார் ஹுனைஸ் பாரூக்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. பிறின்சியா டிக்சி

முற்று முழுதாக அபிவிருத்தியை நோக்காகக் கொண்டும் வன்னி மக்களின் அடிப்படைப் பிரச்சினையான நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டுமே, தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டதாக, ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

இதுவரை காலமும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஹுனைஸ் பாரூக், தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சகிதம், முசலிப் பிரதேச சபைக்குட்பட்ட சிலாபத்துறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துகொண்டார்.

மு.கா.வில் இணைந்தமை குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், “வன்னி மக்களுக்கான நீர்ப் பிரச்சினை, மீள்குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள், கல்வி, கலாசாரம், பாதை அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு என்பவற்றை மேம்படுத்துவது குறித்த தனது எதிர்கால நடவடிக்கைகள் அமையும்” எனவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “வன்னிக்கு ஒளி” என்ற வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யுத்தம் காரணமாக வன்னி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றத்துக்கு வழிவகை செய்வதும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும், பொருளாதார மேம்பாட்டுக்காகச் செய்வதும் இவ் வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆரம்ப கட்டமாக 300 மில்லியன் ரூபாய் பொறுமதியான வேலைத்திட்டம் நிறைவுசெய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன்,  வன்னியிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றம் செய்வது, அடிப்படை வசதிகளை வழக்கி, அவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கான, முதற்புள்ளியாக இது இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், சுகாதாரப் பிரதியமைச்சர் பைஸால் காசிம், வட மாகாண மற்றும் வட மேல் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .