Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Niroshini / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
“வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் தோல்வி கண்டுள்ள இந்த அரசாங்கம், அதற்காக உருப்படியான வேலைத்திட்டத்தை இது நாள் வரைக்கும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை” என, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
“தனித்தனியாகப் போராட்டங்களை நடத்துவதனை விடுத்து, வடக்கு – கிழக்கு – தெற்கு - மேற்கு என அனைத்து மக்களும் ஒன்றுசேர்ந்து, பொதுவானதொரு போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.
கிளிநொச்சிக்கு சனிக்கிழமை (11) விஜயம் மேற்கொண்ட அவர், மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“யுத்த காலத்தில் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் விடயத்திலும், அரசாங்கத்தின் நடவடிக்கைள் தோல்வி அடைந்துள்ளன. யுத்தத்தைக் காரணம் காட்டி இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள், தமிழ் மக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்படவில்லை. இந்த விடயத்தில் அரசாங்கம், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததாகக் காணமுடியவில்லை. இதனால் இந்தப் பிரச்சினை, மேலும் மேலும் உக்கிரமடைந்த பிரச்சினையாக காணப்படுகின்றது” என்றார்.
மேலும், “கடற்றொழில் ஈடுபடும் முனவர்களின் பிரச்சினைகள், பெரிய பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன. குறிப்பாக, எமது கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்புக் காரணமாக, எமது கடல் வளங்களை சூறையாடுவதோடு, எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது.
"இந்தப் பிரச்சினைக்கு இதுவரைக்கும் அரசாங்கம், அங்கேயும் இங்கேயும் காய்களை நகர்த்தியிருக்கிறதே தவிர, அந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவில்லை. கடற்றொழிலாளர்களின் பிரச்சினையில் முன்னைய அரசாங்கம் போன்றே, தற்போதைய அரசாங்கமும் நடந்துகொள்வதைக் காணக்கூடியதாக உள்ளது.
"அது மாத்திரமல்ல இந்தியாவுக்கு அடிபணிந்து, இந்தியாவின் வார்த்தை ஜாலங்களுக்கு செவிமடுக்கின்ற அரசாங்கமாகவும் இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்த அரசாங்கமாகவும், இந்த அரசாங்கம் காணப்படுகிறது.
"வட பகுதியில் மக்கள் இவ்வாறு பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்ற நிலையில், தென்பகுதியில் மக்களுக்குச் சொந்தமான வளங்களை வெளிநாட்டுக்குத் தாரை வார்க்கின்ற நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
"ஹம்பாந்தோட்டையில் இருக்கின்ற 15 ஆயிரம் ஏக்கர் காணியை, வெளிநாட்டுக்குத் தாரை வார்க்கின்றது. அதுமாத்திரமன்றி ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வெளிநாட்டுக்குத் தாரைவார்க்கின்றது. இவ்வாறு, மக்களுக்குச் சொந்தமான காணிகளை வளங்களை நீண்டகாலக் குத்ததைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் தாரைவார்க்கின்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.
"இவ்வாறு நாடு முழுவதும் மக்கள் பொதுப் பிரச்சினையை எதிர்கொள்கின்றபோது, மக்கள் தனித்தனியாக போராட்டங்களை நடத்துவதனை விடுத்து, வடக்கு – கிழக்கு – தெற்கு - மேற்கு என அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து பொதுவானதொரு போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்காக மக்கள் விடுதலை முன்னணி, மக்கள் அணியைத் திரட்டி வருகிறது” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago