2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போன கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் பகிரங்க வேண்டுகோள்

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு பகிரங்க வேண்டுகோளை முன்வைக்கும் வகையில், மன்னார் பஸார் பகுதியில் இன்று காலை, துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினர்.

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் ஒன்றிணைந்து, காலை 10 மணிமுதல் குறித்த துண்டுப்பிரசுரங்களை மன்னார், அரச பஸ் தரிப்பிடப் பகுதியில் வைத்து, மக்களிடம் கையளித்தனர்.

வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை:

நாங்கள், பாதிப்புற்ற தமிழ் மக்கள். மகனோ, மகளோ, கணவரோ ஆன எங்கள் சொந்தங்கள்? இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர், காணாமல் போகச் செய்யப்பட்டனர், பாலியல் வன்தாக்கு அல்லது வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர்.

நாங்கள், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு விடுக்கும் வேண்டுகோள் இது:

30/1 தீர்மானத்தின் படி இலங்கை அரசாங்கம், தன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான கால அவகாசத்தைக் கொஞ்சங்கூட நீட்டித் தராதீர்கள். ஏற்கெனவே காலமும் இடமும் தரப்பட்டது, ஆனால், இலங்கை அரசாங்கம், இந்தத் தீர்மானத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. கால அவகாசத்தைச் சிறிதளவே நீட்டித்தாலும், அதன் விளைவாக, பொறுப்புரைத்தலே இல்லாமற்போகும், எங்களுக்கும் ஏனையத் தமிழ் மக்களுக்கும் ஆபத்தே விளையும் என்று நாங்கள் அழுத்தமாக நம்புகிறோம்.

கால நீட்டிப்புத் தராதீர்கள் என்று உங்களை வேண்டுவதற்கான காரணங்கள்.

1) இந்தத் தீர்மானத்தைப் பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டாக முன்மொழிந்தது இலங்கை. ஒன்றரை ஆண்டு காலத்தில், அதாவது 2017 மார்ச் மாதத்துக்குள், தன் கடப்பாடுகளை நிறைவேற்றவும் அது  முழுமையாகப் பொறுப்பேற்றது.

2) இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் இலங்கை அரசாங்கம், தன் கடப்பாடுகளை நிறைவேற்ற உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல, இலங்கை ஜனாதிபதியும் ஏனைய தலைவர்களும், தீர்மானத்தின் முதன்மைக் கூறுகளை விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை இடம்பெறச் செய்வது உள்ளிட்டவற்றை, பகிரங்கமாகத் திரும்பத்திரும்ப நிராகரித்துமுள்ளார்கள்.

3) இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்தன என்பதைப் பல அறிக்கைகள் ஆவணப்படுத்தியுள்ளன. இவற்றுள் ஒன்று, சித்திரவதை பற்றிய ஐநா சிறப்பு அறிக்கையாளர் யுவான் மெண்டிஸ் அண்மையில் அளித்த அறிக்கையாகும்.

4) சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம், அண்மையில் தந்த அறிக்கை, இலங்கை இராணுவம் நடத்தும் 'பாலியல் வல்லுறவு' முகாம்கள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தியது.

இந்த முகாம்களில் தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்துள்ளனர். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியப் பேரரசின் இராணுவம், பெரும்பாலும் கொரியர்களும் சீனர்களுமான பெண்களை 'சுகபோகப் பெண்களாக' வைத்திருந்த காலத்துக்குப் பின், அரிதில் ஆவணப்படுத்தப்பட்ட பாதுகாப்புப் படைகளின் 'வல்லுறவு முகாம்களில்' இவையும் அடங்கும்.

5) காணாமல் போகச் செய்யப்பட எங்கள் புதல்விகளில் சிலர், இந்த 'வல்லுறவு முகாம்களில்' வைக்கப்பட்டிருப்பார்களோ என்றஞ்சுகிறோம்.

6) இப்போது ஒரு 'மறுசுழல் தீர்மானத்தின்' வாயிலாக இலங்கைவுக்கு மேலும் ஈராண்டு காலத்துக்கு நீட்டிப்புத் தர முயற்சிகள் செய்யப்படுகின்றன.

7) இந்த 'மறுசுழல் தீர்மானத்தின்' முதன்மைக் கூறாகிய, விசாரணைகளில் அயல்நாட்டு நீதிபதிகளைச் சேர்த்துக் கொள்வது என்பதை, ஏற்கெனவே இலங்கைவின் ஜனாதிபதியும் பிரதமரும் பகிரங்கமாக நிராகரித்துள்ளனர்.

8) அரசாங்கமே 'மறுசுழல் தீர்மானத்தின்' முதன்மைக் கூறினை நிராகரிக்கிறது என்றால், அதே அரசாங்கம் இந்த 'மறுசுழல் தீர்மானத்தைச்' செயலாக்கும் என்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவை, எப்படி எதிர்பார்க்கலாம்?

9) மேலும், இலங்கை முந்தைய தீர்மானத்தின்படி தன் கடப்பாடுகளை நிறைவேற்ற, உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை ஆதலால், இந்த 'மறுசுழல் தீர்மானம்' மட்டும் செயலாக்கப்படும் என்று, ஐநா மனித உரிமைகள் பேரவை, எப்படி எதிர்பார்க்கலாம்?

10) எங்கள் புதல்விகளையும் குடும்பத்தினரையும் கொன்றும், காணாமல் போகச் செய்தும், பாலியல் வன்செயலுக்கு ஆளாக்கியும் கொடுமைகள் செய்த பத்தாயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர், இன்றளவும் எம்மிடையே நிறுத்தப்பட்டுள்ளனர்.

11) கால நீட்டிப்பு ஏதும் தரப்படுமானால், எமக்கும் தமிழ் மக்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்றும், அது எமக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகக் கொடுமைகள் செய்ய இலங்கைப்  பாதுகாப்புப் படைகளுக்குத் துணிச்சல் கொடுப்பதாகி விடும் என்றும் அஞ்சுகிறோம்.

எமது துயரத்தையும் தமிழ் மக்களின் துயரத்தையும் ஐநா மனித உரிமை மன்றம் புரிந்துகொள்ள வேண்டுகிறோம் என குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .