2025 ஜூலை 12, சனிக்கிழமை

கேப்பாபிலவு தொடர்பில் தீர்வுக்கு வலியுறுத்துவோம்: யாழ். ஆயர்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 18 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன்

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம், இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையில் பேசப்பட்டு முடிவுக்கு வலியுறுத்தப்படுமென, யாழ். ஆயர் கலாநிதி ஜஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"முல்லைத்தீவு  கேப்பாபிலவு  பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம், 18ஆவது நாளாக எந்த முடிவுமின்றித் தொடர்வது மனவருத்தம் தருகிறது.

முல்லைத்தீவு  கேப்பாபிலவு  பிலக்குடியிருப்பில்  வான் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 84 குடும்பங்களுக்குச் சொந்தமான காணி விடுவிக்கப்பட வேண்டுமென, 18 நாட்களாக மக்கள் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேவேளை புதுக்குடியிருப்பின் மையப்பகுதியில்  பிரதேச செயலகத்தின் முன்னால் உள்ள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள 19 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டுமென 14 நாட்களாக மக்கள் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தம் சொந்த நிலங்களில் கால் பதிக்கும் வரை நகரப்போவதில்லை என இம் மக்கள் மிக உறுதியாக இருப்பது எல்லாவகையிலும் நீதியானதும் நியாயமானதுமாகும். 30 ஆண்டு கால கொடிய போர் முடிவடைந்து  7 ஆண்டுகளுக்கு மேலாகியும் நல்லாட்சி அரசாங்கம் தாமாகவே செய்திருக்க வேண்டிய ஒரு பணியை மக்கள் அறவழிப் போராட்டம் நடத்தி 17 நாட்களாகியும் அரசாங்கம் எந்தக் கவனமும் இன்றி இருப்பது கண்டிக்க தக்கது.

இதற்கான தீர்வினைக் காண்பது தலைபோகிற காரியமல்ல. நல்லாட்சி அரசாங்கம் உடனடியாகவே இப்பிரச்சினைக்கு முடிவு காண விரைந்து செயற்பட வேண்டுமென அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பேரால் அரசாங்கத்துக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.

எதிர்வரும் 22ஆம் திகதி, இலங்கையின் அனைத்து  மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்களும் கூடவுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அமர்வில், இது பற்றி விரிவாகப் பேசி தீர்வு ஒன்றினை அடைய வலியுறுத்துவோம்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .