2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் பன்றிக்காச்சல்?

Menaka Mookandi   / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில், 592 பேர் பன்றிக்காச்சலுக்கான சிகிச்சையை பெற்றுள்ளனர். இந்நிலையில், கர்ப்பிணிகளை அவதானமாக இருக்குமாறு, சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சலானது, தற்போது இலங்கையின் பல மாவட்டங்களில் அதி தீவிரமாகப் பரவிவருகின்றது. இது, கர்ப்பிணிகள், பிரசவத்தின் பின்னரான தாய்மார், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மூட்டு வருத்தம்,  சலரோகம் உடையவர்கள், இந்த வைரஸின் தாக்குதலுக்கு உள்ளாகும் போது, விளைவுகள் கடுமையாக இருக்கும் என, சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

எனவே கர்ப்பிணிகள், இக்காலப் பகுதியில் சனங்கள் கூடும் இடங்கள், கோவில் திருவிழாக்கள், சந்தைகள், கொண்டாட்டங்கள், பஸ் மற்றும் ரயில்களில் பயணம் செய்தலின் போது, இந்த நோய்த் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில், இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் உள்ளதென்பது, கடந்த ஜனவரி 25ஆம் திகதி கண்டறியப்பட்டுள்ளது. இதன் தாக்கமானது 25.01.2017 இலிருந்து கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து இம்மாதம் 3ஆம் திகதி வரையான 67 நாட்களுக்குள், கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில், 592 நோயாளர்கள், இந்த இன்பளுவன்சா (H1N1) நோய்க்கான சிகிச்சையினைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இவர்களில் 227 கர்ப்பிணிகளும் 38 சிறார்களும் அடங்குகின்றனர்.

இந்த இன்புளுவன்சா (H1N1) நோயின் ஆபத்து, கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னமும் குறைவடையாத காரணத்தினால், எந்தவொரு கர்ப்பவதியோ அல்லது பிரசவத்தின் பின்னரான தாயாரோ, காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகிலுள்ள அரச மருத்துவமனையை நாடுமாறு, கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு, குடும்பநல உத்தியோகத்தரையோ அல்லது பொதுச்சுகாதார பரிசோதகரையோ தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .