2025 ஜூலை 12, சனிக்கிழமை

சிறுவர்களின் கல்வி செயற்பாடுகள்: இடைவிலகியோர் இணைந்தனர்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர்களின் அபிவிருத்திகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் வெற்றியளித்துள்ளதாக, மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

கடந்த கால யுத்தம் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகக் காணப்படுகின்ற கிளிநொச்சி மாவட்டத்தில், பல்வேறு வகையான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும், பின்தங்கிய பகுதிகளில் பாடசாலை செல்லாத சிறுவர்கள், பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்கள், சிறுவர் தொழிலாளர்கள் எனப் பல தரப்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

“மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் பாடசாலை செல்லாத அல்லது இடைவிலகிய மாணவர்கள் காணப்பட்டனர்.

“எமது உத்தியோகத்தர்கள் மூலம் இதற்கான காரணங்களைப் பரிசீலனை செய்திருந்தோம். அதில் இவ்வாறு சிறுவர்கள் காணப்படுவதற்கு வறுமை ஒரு காரணமாகவும் இருந்தது. குடும்பப்பின்னணிகளில் உள்ள பிரச்சினைகள் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் இன்மை, சிறுவர்களை தொழில்களுக்கு அனுப்புதல் போன்ற பல்வேறுபட்ட காரணங்கள் காணப்பட்டன.

“இவ்வாறு வறுமை நிலைமையில் இருந்த குடும்பங்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கியதுடன், இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் குறிக்கப்பட்ட தொகையைச் சிறார்களின் கல்விக்கு வைப்பிலிடுமாறு வலியுறுத்தியிருந்தோம். அது ஓரளவு வெற்றியளித்துள்ளது.

“இதனைவிட குறிப்பிட்ட சில இடங்களில் பாடசாலை இடைவிலகல் மற்றும் ஒழுங்கற்ற வரவுகள் அதிகளவில் காணப்பட்ட கிராமங்களை அடையாளம் கண்டு, இது தொடர்பில் நீதிமன்ற ஆலோசனைகளைப் பெற்று, மாவட்ட செயலகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்களையும் பொலிஸாரையும் இணைத்து, கிராமங்களை சுற்றி வளைத்து, பாடசாலை செல்லாத சிறுவர்களைக் கைதுசெய்தபோது, தாய் தந்தையரின் அக்கறையின்மை தொழில்களுக்கு செல்லுதல் போன்ற தன்மைகள் காணப்பட்டன.

“இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சிறுவர்களை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, நீதிமன்றக் கட்டளைகளுக்கு அமைவாக, பெற்றோர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு குறிப்பிட்ட சிறுவர்கள் மீளப்பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், ஒரு தொகுதியினரை சிறுவர் இல்லங்களிலும் சிலரை சான்றுபெற்ற பாடசாலைகளிலும் இணைத்துள்ளோம்” என, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .