2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

செல்வம் அடைக்கலநாதனின் வழக்கு அநுராதபுரத்துக்கு மாற்றம்

Niroshini   / 2016 மே 26 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அந்தோனிப்பிள்ளை மரியசீலன் ஆகியோருக்கு எதிராக வவுனியா மேல் நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வந்த 2161/10 என்ற இலக்கமுடைய பயங்கரவாத தடைச்சட்ட ஏற்பாடுகளின் கீழ் இடம்பெற்று வந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இன்று இவ் வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலசிங்கம் சசிமகேந்திரன்  முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே வவுனியா மேல் நீதிமன்றத்தில் இருந்து உடனடியாக அனுராதபுரம் மேல் நிதிமன்றத்துக்கு மாற்றப்படுவதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரசசட்டவாதி நிஷாந் நாகரட்ணம் திறந்த மன்றில் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டில் வவுனியாவில் சன் ரீவி எனும் தொலைக்காட்சி ஊடகமொன்றின் ஊடாக அரச பாதுகாப்புக்கு அல்லது சட்ட ஒழுங்குக்கு பங்கம் விளைவிக்க கூடிய அல்லது அரசாங்கத்துக்கு எதிரான குரோத எண்ணங்களை தூண்டுவதற்கு அல்லது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தமிழ் மக்களை தூண்டும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாக்கியதாக குற்றஞ்சாட்டி 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் அமிர்தநாதன் அடைக்கலநாதன் அல்லது செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அந்தோனிப்பிள்ளை மரியசீலன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் வவுனியா மேல் நிதிமன்றத்தில் 2010 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் விளக்கம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த தவணை அதாவது 27.4.2016 அன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த 2 ஆம் எதிரியான அந்தோனிப்பிள்ளை மரியசீலன் என்பவரை பிணையில் விடுவது தொடர்பிலான முடிவினை இன்றைய தினமும் அதாவது 26.5.2016  எடுக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இப் பிணையில் விடுவதான தீர்மானத்தை கடுமையாக ஆட்சேபித்த அரச சட்டவாதி நிஷாந் நாகரட்ணம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான எதிரிக்கு பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்துக்கு  கிடையாது என தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இன்றைய தினம் (26.5.2016) மன்றில் தோன்றிய அரசசட்டவாதி நிஷாந் நாகரட்ணம் சட்டமா அதிபர் நீதாய சட்டப்பிரிவு 47 இன் கீழ் இவ் வழக்கினை வவனியா மேல் நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுகின்ற முடிவினை சட்டமா அதிபர் எடுத்துள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

இதன் படி இவ் வழக்கு உடனடியாக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ் வழக்கில் எதிரிகள் சார்பில் வவியா சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .