2025 ஜூலை 02, புதன்கிழமை

சட்டவிரோதங்களை கட்டுப்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள்

Niroshini   / 2016 ஜூன் 15 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத கடற்தொழில்களை கட்டுப்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், தொழில் அனுமதிகளை ஏற்படுத்தி தருமாறு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அ.மரியராசா இன்று புதன்கிழமை (15) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“வெளிமாவட்ட மீனவர்களின் வருகை என்பது எமது தொழிலாளர்;களை மிகவும் பாதிக்கின்றது. தடை செய்யப்பட்ட தொழில்கள் டைனமற், சுறுக்கு வலை, வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத தொழில்களாலும், கடலட்டைத் தொழில் செய்பவர்களாலும், நிபந்தனைகளை மீறி எமது மாவட்டத்தில் தொழில் செய்து வருபவர்களாலும் முல்லைத்தீவு மீனவர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கரைவலைப்பாடுகளில், மனித வலுவைப் பயன்படுத்தி இழுக்க வேண்டிய நிலையில் உழவு இயந்திரங்களைக் கொண்டு இழுப்பதால் அது சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது,

“வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தான் முடிவுகளை எடுக்க வேண்டும். அங்கிருந்து வரும் அனுமதிகளுடன் வெளிமாவட்ட மீனவர்கள் இங்கு வந்து கடற்றொழில்களில் ஈடுபடுகின்றனர்.

அவ்வாறு வெளிமாவட்ட மீனவர்களின் வருகையால் தாங்கள் பாதிக்கப்படுவதாக எமது மாவட்ட மீனவர்கள் முறைப்பாடுகளை அடிக்கடி முன்வைக்கின்றனர். நாங்கள் அரச அதிகாரிகள் என்ற வகையில் சட்ட ரீதியான அனுமதிகளுடன் வருபவர்களை தடுக்க முடியாது. எனினும் எமது சமூகம் சார்பான பிரச்சினை என்ற வகையில் சுட்டிக்காட்ட முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .