2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

’சட்டவிரோத தொழிலுக்காக 1,500 படகுகள் படையெடுப்பு’

Niroshini   / 2021 ஜூலை 19 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - கொக்கிளாய், முகத்துவாரம் பகுதியிலிருந்து நாளாந்தம் சட்டவிரேத கடற்றொழில் செயற்பாடுகளுக்காக, 1,500க்கும் மேற்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த மீன்பிடிப்படகுகள் முல்லைத்தீவு கடலுக்குள் படை எடுக்கின்றன என, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் கடற்றொழில் அமைச்சு என்பன ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனவா என்றும், அவர் வினவினார்.

முல்லைத்தீவு - கொக்குளாய் பகுதிக்கு, நேற்று (18) சென்ற  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் ஆகியோர், அங்குள்ள நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டனர்.

அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, ரவிகரன் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இந்தப் பயணத்தடைக் காலத்தில் தென்னிலங்கையில் இருந்து வருவதற்கு இவர்களுக்கு அனுமதியை வழங்கியது யார் எனவும் இவ்வாறு தெற்கிலிருந்து மீனவர்கள் வரும் போது, வீதித்தடைகளை ஏற்படுத்தி பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் என்ன பார்த்துக் கொண்டு இருந்தார்கள் எனவும்; கேள்வி எழுப்பினார்.

கொக்கிளாய் - முகத்துவாரம் பகுதியில் ஏறத்தாள தென்னிலங்கையைச் சேர்ந்த 300  மீனவக் குடும்பங்களுகளே பதிவை மேற்கொண்டு வசித்து வருகின்றன எனத் தெரிவித்த அவர்,  இந்நிலையில், முகத்துவாரம் பகுதியிலிருந்து ஏறத்தாள 1,500க்கும் மேற்பட்ட படகுகள் சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்காக படையெழுத்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது என்றும் கூறினார்.

'இதன் பின்னர் இவ்வாறு கடலுக்குள் போனவர்கள் அங்கு சட்டவிரோத தொழில்களின் மூலம் அதிக மீன்களைப் பிடித்ததும், கடலில் இருந்து கரையில் இருக்கும் தெற்கைச் சேர்ந்த சகாக்களுக்கு அhலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்துவார்கள். இவ்வாறு அழைப்பை ஏற்படுத்தியவுடன் கரையில் இருப்பவர்கள் சுருக்குவலைகளுடன் கடலுக்குள் செல்வார்கள். அவ்வாறு கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட தெற்கைச் சேர்ந்த படகுகள் இரண்டாவது தடவையாகவும், கடலுக்குள் செல்வதாக இங்குள்ள தமிழ் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்' என்றும், ரவிகர் தெரிவித்தார்.

இவர்களுடைய வாடிகளுக்கு அருகிலேயே கடற்படை முகாம் ஒன்று அமைந்திருக்கின்றதெனத் தெரிவித்த அவர்,  சில சந்தர்ப்பங்களில் கடற்படையினர் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் தெற்கைச் சேர்ந்த மீனவர்களின் ஓரிரு படகுகளைக் கைதுசெய்தாலும் இலஞ்சங்களைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பதாக இங்குள்ள மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர் என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X