2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘சைவ அடையாளங்கள் வெளிப்பட்ட இடத்தில் புத்த கோபுரம்’

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க. அகரன்

சைவ அடையாளங்கள் வெளிப்பட்ட இடத்தில் இன்று புத்த கோபுரம் என்று கூறி புத்த சமயத்தை திணிக்கும் முகமாக 75 சதவீதமான கட்டுமானப் பணியை செய்திருக்கின்றார்கள் என வட மாகாண சபை உறுப்பினர் முன்னாள் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - குமுழமுனை குருந்தூர்மலை விடயம் தொடர்பில் வினவிய போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“குருந்தூர் மலை சம்பந்தமாக எங்களுடைய சைவ அடையாளங்கள், யாவும் அழிக்கப்பட்டிருப்பதை நானும் பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் மற்றும் சிறீதரன் ஆகியோர் கொண்ட குழு நேரில் சென்று பார்வையிட்ட போது எங்களால் காணக்கூடியதாக இருந்தது.

உடனடியாக அன்றே நான் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்து விட்டு பொலிஸார் கேட்டு கொண்டதற்கிணங்க 29.01.2021 அன்று அந்த இடத்துக்கு பொலிஸாரை அழைத்து சென்று எங்களுடைய சைவ அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதனை காண்பித்திருந்தேன். 

அந்த நேரம் புத்த விகாரை அந்த இடத்துக்கு அருகாமையில் இல்லை. தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வு நடவடிக்கைக்காக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆய்வு செய்ய போவதாகத்தான் அவர்கள் தெரிவித்திருந்தார்கள். 

இலங்கை சுதந்திரம் அடைந்த தினம் என்று கூறப்படும் நாள் அன்று  (04.02.2022 ஆம் ஆண்டு) அங்கே சென்ற போது கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எட்டுமுக சிவலிங்கம் அங்கே வெளிப்பட்டதாக, ஊடகங்களில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.

புத்த சமயத்தை திணிக்கும் நோக்கத்தோடு தொல்லியல் திணைக்களம் ஈடுபடுகின்றதா? தொல்லியல் திணைக்களம் என்பது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பே.   அதற்கு நாங்களும் மறுப்பில்லை.

ஆனால் ஆய்வு என்ற போர்வையில் தொல்லியல் திணைக்களத்தினர் அங்கே கட்டுமானப் பணி மேற்கொள்வதை நாங்கள் காணக்கூடியதாக இருந்தது.

 

இருந்தாலும் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சட்டத்தரணியாக இருப்பதால் அவர் ஊடாக இதற்கான வழக்கு கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.

கடந்த எட்டாம் திகதி அந்த வழக்கு நடைபெற்றது. கொவிட்- 19 நடவடிக்கை காரணமாக நாங்கள் செல்லவில்லை. அடுத்த தவணைக்கு நாங்களும் செல்வோம்” என்று கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X