2025 ஜூலை 05, சனிக்கிழமை

தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது எவ்வாறு?

Menaka Mookandi   / 2016 ஜூலை 04 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பொருளாதார மத்திய நிலையத்துக்கான இடத்தை தீர்மானிக்க முடியாமல் தடுமாறுபவர்களால், தமிழ் மக்களின் பிரச்சினையை எவ்வாறு தீர்த்துவைக்க முடியும்? என்ற ஐயம் தோன்றுகின்றது என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், திங்கட்கிழமை (4) வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே, மேற்கண்ட சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

'வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பாக, மிக நீண்ட வாதப் பிரதிவாதம் தொடர்கிறது. வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் மத்திய இடத்திலேயே இவ்வாறான மையம் அமைவது யாவருக்கும் பயன்மிக்கதாக காணப்படும். எனவே, குறுகிய அரசியல் இலாப நோக்குடன் ஓமந்தையா? தாண்டிக்குளமா? என பட்டிமன்றமா நடத்துகின்றீர்கள்? உங்களது அரசியல் சித்து விளையாட்டுக்கு, கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுறுத்தப் போவது மிகவும் வேடிக்கையான நகைச்சுவையாகும்.

நீணடகால அடிப்படையில், வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் பொதுவான, பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதே யதார்த்தமான தூரநோக்கு சிந்தனையாகும். அவ்வாறு நோக்குகையில் ஓமந்தை அல்லது மாங்குளமே பொருத்தமாகும். பொருளாதார வல்லுனர்களுடனும் கருத்தியாளர்களுடனும் ஆலோசித்து எடுக்கப்பட வேண்டிய தீர்மானத்தை, யாவற்றுக்கும் இலாப நோக்கு பார்க்கும் அரசியல் வாதிகளின் எடுகோள் வாதங்கள் ஏற்புடையது அல்ல.

எனவே, வவுனியாவுக்கு எந்த இடம் பொருத்தம் என்பது முக்கியமல்ல. வடமாகாணத்துக்கு எந்த இடம் பொருத்தமாக அமையும் என்பதே அவசியம். அவ்வாறுதான் சிந்திக்க வேண்டும். அதை விடுத்து, மாறுபட்டு விவாதிப்பது நிலையாக பயன் தரவல்லது அல்ல. ஆகவே, ஓமந்தை அல்லது மாங்குளமே பொருத்தமாக அமையும் என்பதே எமது வேண்டுகை என்பதுடன், பொருளாதார மத்திய நிலையத்துக்கே இடத்தை தீர்மாணிக்க முடியாமல் தடுமாறும் உங்களால், தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும் எனும் ஐயமும் எழுகின்றது' என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .