2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

‘தீர்வு சாதகமாக வரும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“அண்மையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்கள். இதனடிப்படையில், ஒரு தீர்வு சாதகமாக வரும் என நாங்கள் நம்பலாம்” என, வட மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். 

யாழ். ஊடக அமையத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிக்கையில், 

“தீபாவளி நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன் அப்போது ஜனாதிபதியின் செயலாளரும் கலந்துகொண்டிருந்தார். அவருடன் பேசியபோது அவர் கூறியிருந்த விடயம், ‘தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் ஜனாதிபதி உடனடியாக தலையிட்டால் அந்தச் செய்தி தெற்கு மக்களுக்குச் சென்றடையும். அதன் பின்னர் ஜனாதிபதி நீதித்துறையில் தலையீடு செய்கிறார் என்பது தெற்கில் உணரப்பட்டால் சிறைகளில் உள்ள முன்னாள் படையினர், பல்வேறு குற்றவாளிகள் விடயத்திலும் ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டும் என தெற்கிலும் அழுத்தங்கள் கொடுக்கப்படும்’ என்றார்.  

“இதேவேளை, சட்டத்தின்படி எதிரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கவே இடம் உள்ளது. சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்க இடமில்லை. குறிப்பாக மூதூர் வழக்கு எதிரிகளுக்கு பாதுகாப்பு இல்லாமையால் திருகோணமலையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், சாட்சிகளுக்குப் பாதுகாப்பில்லை எனக் கூறி வவுனியாவில் இருந்து வழக்குகளை அநுராதபுரத்துக்கு மாற்றுவது என்ன அடிப்படையில் என்பது தெரியவில்லை.  

“இந்த விடயத்தில் சட்டமா அதிபர் முரண்பாடான தீர்மானத்தை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.  

“இதேவேளை, என்னுடன் தொடர்பை உண்டாக்கிய தமிழ் அரசியல் கைதிகள், தங்களை வைத்து அரசியல் நடப்பது குறித்து மிக வருத்தப்பட்டார்கள். அவ்வாறு அரசியல் நடத்துவதைத் தவிர்த்து, தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .