2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

படையினருக்கு அதிக காணிகள் தேவையில்லை: ரெஜினோல்ட் குரே

George   / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளார். மக்களின் சொந்தக்காணிகள் மீண்டும் மக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று. அதற்கமைவாக முள்ளிக்குளம் மக்களின் நிலங்கள் மீண்டும் மக்களிடமே மீள ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என, வடமாகாண ஆளுநர்  ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று வெள்ளிக்கிழமை மாலை, முள்ளிக்குளம் சென்று நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் கிராம மக்களை சந்தித்த பின் அங்கு உரையாற்றுகையிலேயே வடமாகாண ஆளுநர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “மக்களினுடைய பூர்வீக நிலம் மக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். அதே போன்று நாட்டின் பாதுகாப்பும் இருக்க வேண்டும். மக்களின் காணிகள் விடுவிப்பு குறித்து யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அவசர கலந்துரையாடல் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களின் பாதிப்புக்கள் குறித்து விவரங்களை, பெற்றுக்கொள்ளுவது, இந்த விவரங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி உரிய தீர்வை பெற்றுக்கொள்ளுவது என, அனைவரும் இணைந்து  தீர்மானத்துக்கு வந்தனர்.

முள்ளிக்குளம் மக்களின் காணி பிரச்சினை தொடர்பான சகல விவரங்களும் என்னிடம் வழங்கப்பட்டுள்ளன. நான் குறித்த பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து உரையாடவுள்ளேன்.

அதன்போது, முள்ளிக்குளம் மக்களின் பிரச்சினை குறித்து அவருக்கு தெளிவுப்படுத்துவேன். நீங்கள் தொடர்ந்தும் கஷ்டப்பட வேண்டாம். இந்த அரசாங்கத்துக்கு  மக்களாகிய உங்களின் காணிகள் தேவையில்லை. கடந்த காலங்களை போன்று படையினருக்கு அதிகளவான காணிகள் தேவையில்லை.

இராணுவ அதிகாரிகளுக்கு மக்களின் காணிகளை மீள மக்களிடம் வழங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அது நல்ல நோக்கம்.

எனவே, முள்ளிக்குளம் மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து நல்லதொரு முடிவொன்றை பெற்றுக்கொண்டு மீண்டும் முள்ளிக்குளம் மக்களாகிய உங்களை சந்திக்க இங்கே வருவேன்” என, வடமாகாண ஆளுநர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .