2025 ஜூலை 02, புதன்கிழமை

பள்ளிமுனை கிராம மக்களின் காணிகளை மீள வழங்க கடற்படை மறுப்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 13 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்திலுள்ள பொது மக்களின் காணிகளில் தற்போது நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி இடம்பெயர்ந்த மக்களை அக்காணிகளில் மீளக்குடியேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதும், குறித்த காணிகளில் இருந்து வெளியேற கடற்படையினர் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லையென இடம்பெயர்ந்துள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார், பள்ளிமுனை கிராமத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான 25 வீட்டுத்திட்ட கிராமத்திலுள்ள காணிகள் மற்றும் வீடுகளில் கடற்படையினர் முகாம்களை அமைத்துள்ளனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி இராணுவத்தினர் இந்த வீட்டுத்திட்டத்தினுள் உட்புகுந்த நிலையில் குறித்த வீட்டுத்திட்டத்தில் வாழ்ந்து வந்த மக்கள் வெளியேறினர்.

பின்னர், நிர்வாக வசதியாக பொலிஸார் அங்கு இணைந்து கொண்டனர்.

1995ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இராணுவம் குறித்த வீட்டுத்திட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில் பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் செயற்பட்டனர்.

இந்நிலையில், குறித்த காணிகளிலுள்ள படையினரை வெளியேற்ற அக்கிராம மக்கள் தொடர்ச்சியக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். ஆனால், இதுவரை பயனளிக்கவில்லை என அம்மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
இம்மக்களின் சொந்த வீடுகள் மற்றும் காணிகள் கடற்படையினரினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், 1990ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான சுமார் 26 வருடங்களுக்கு மேலாக பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளதாக  அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
தமது காணிகளை மீட்டுத்தருமாறு வலியறுத்தி, பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, நல்லாட்சி அரசாங்கம், படையினர் வசம் இருக்கின்ற மக்களின் காணிகளை மீட்டுக்கொடுக்கும் இச்சந்தர்ப்பத்தில் மன்னார் பள்ளிமுனை கடற்கரையோரமாக உள்ள 25 வீட்டுத்திட்ட காணிகளையும் மீட்டுக்கொடுக்க உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .